த.வெ.க.வுடன் கூட்டணி குறித்து கட்சி மேலிடம் முடிவு செய்யும்- குஷ்பு
- அரசியல் தெரியாமல் இப்படி கேள்வி கேட்டால் நான் சிரிக்க தான் செய்வேன்.
- உங்கள் கூட்டணி ஆளுகின்ற இடங்களில் உள்ள பிரச்சனைகளுக்கு ஏன் குரல் கொடுக்கவில்லை.
மதுரை:
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கேட்டு, பா.ஜ.க. மகளிரணி சார்பில் நீதி யாத்திரை இன்று நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக பா.ஜ.க. தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு விமானம் மூலம் சென்னையிலிருந்து மதுரை வந்தார்.
மதுரை விமான நிலையத்தில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-
தி.மு.க. ஆட்சி காலத்தில் ஜனநாயக ரீதியாக செயல்படவில்லை. சர்வாதிகார ஆட்சி தான் நடைபெறுகிறது. அவர்களுக்கு எதிராக அவர்கள் குற்றத்தை கைநீட்டி காட்டினாலே அவர்களை கைது செய்வதும், வழக்குப் பதிவு செய்வது மட்டும்தான் தமிழகத்தில் நடைபெறுகிறது.
பள்ளிக்காக ரூ.44 ஆயிரம் கோடி செலவிட்டதாக அவர்கள் சொல்கிறார்கள், அதை செய்தார்களா? அதற்கு சாட்டை எடுத்து அடிக்கட்டுமா? அண்ணா பல்கலைக்கழக பிரச்சனை முதல் பிரச்சனை இல்லை, அதுபோல எக்கச்சக்க பிரச்சனைகள் உள்ளது.
மாணவி விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு எதிர்க்கட்சிகள் அரசியல் செய்ய வேண்டாம் என தி.மு.க. அமைச்சர்கள் கூறுவது போல் நிச்சயமாக இதில் யாரும் அரசியல் செய்யவில்லை. நீதிமன்றம் சொல்லியிருப்பதால் இதற்கு பேச முடியாது. அது நீதிமன்றத்தை அவமதித்ததாகிவிடும். நியாயம் கிடைக்க வேண்டும் என்பதற்குத்தான் போராடுகிறோம்.
அரசியல் ஏன் செய்கிறீர்கள் என்று கேட்டதற்கு அரசியல் செய்யாமல் அவியல் செய்ய வேண்டுமா என்று கேட்ட முதல்வர் தானே இவர். நீங்கள் அவியல் செய்யும்போது தற்போது நாங்கள் கேட்டால் மட்டும் அது அரசியல் என்றால் ஜனநாயக ரீதியாக இது எப்படி நியாயம்.
மணிப்பூர் விவகாரத்தில் பா.ஜ.க. குரல் கொடுக்கவில்லை என சீமான் கூறியுள்ளார். அதுபோன்று மக்களை திசை திருப்புவதற்காக பேசக்கூடாது. மணிப்பூர் பிரச்சனையும் பாலியல் விவகாரமும் ஒன்று கிடையாது. மணிப்பூரில் எல்லை மீறிய பிரச்சனைகள் உள்ளது. அது கூட தெரியாமல் தி.மு.க.வினர் பேசுகிறார்கள் என்றால் அவர்கள் எதுக்கு அரசியலில் இருக்கிறார்கள். அரசியல் தெரியாமல் இப்படி கேள்வி கேட்டால் நான் சிரிக்க தான் செய்வேன்.
உங்கள் கூட்டணி ஆளுகின்ற இடங்களில் உள்ள பிரச்சனைகளுக்கு ஏன் குரல் கொடுக்கவில்லை. மணிப்பூரில் என்ன பிரச்சனை நடக்கிறது என்பது தெரியாமல் முதல்வர் ஸ்டாலினோ, தி.மு.க.வி.னரோ, காங்கிரஸ் கட்சியினரோ இருக்கிறார்கள் என்றால் அவர்கள் அரசியலில் இருக்கக்கூடாது.
பேரணியில் பங்கேற்றதற்காக நாங்கள் கைது செய்யப்படுவோம். ஜனநாயக ரீதியாக தமிழகத்தில் எதுவும் நடைபெறவில்லை. கைது செய்தால் செய்யட்டும், பார்த்துக் கொள்ளலாம். பா.ஜ.க. மாநிலத் தலைவரை மாற்றுவதற்காக வாய்ப்புள்ளதா என்பதில் யாரும் எந்த முடிவுக்கும் வரவேண்டாம்.
பாலியல் பிரச்சனை உருவெடுத்துள்ள நிலையில் தமிழ்நாட்டில் மகளிர் மேம்பாட்டுத்திறன் மையங்கள் திறக்கப்பட்டு உள்ளது. பெண்களுக்கு பாதுகாப்பு தர முடியவில்லை என்றால் எதற்காக இந்த மையங்கள். பெண்களுக்கு எதிராக ஒரு வன்கொடுமை நடந்தால் அது எந்த ஜாதியோ, சமுதாயமோ, கட்சியோ எதுவும் பார்க்காமல் அந்த சமுதாயத்திற்கு எதிரான வன்கொடுமை என்று பார்க்க வேண்டும், அதில் அரசியல் செய்யக்கூடாது.
பாலியல் விவகாரத்திற்கு எதிராக த.வெ.க. தலைவர் விஜய் குரல் கொடுத்து உள்ளார். இதேபோல் அனைவரும் குரல் கொடுக்க வேண்டும். ஆனால் குரல் மட்டும் கொடுக்கக்கூடாது, அடுத்து என்ன செய்யப் போகிறீர்கள். த.வெ.க.வுடன் கூட்டணி குறித்து கட்சி மேலிடம் தான் பதில் கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.