உள்ளூர் செய்திகள்

விவசாய நிலத்தில் கழிவுநீரை பாய்ச்சிய லாரி சிறைபிடிப்பு

Published On 2025-03-12 11:25 IST   |   Update On 2025-03-12 11:25:00 IST
  • நீரில் 1048 டி.டி.எஸ். உப்பு இருந்தது கண்டறியப்பட்டது.
  • டேங்கர் லாரியை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

பெருந்துறை:

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த சுள்ளிப்பாளையம் பகுதியில் தனியார் பால் உற்பத்தி நிறுவனம் இயங்கி வருகிறது. விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படும் பாலை பதப்படுத்தி பாக்கெ ட்டுகளில் அடைத்தும், ஐஸ்கிரீம், பன்னீர், வெண்ணை, நெய் போன்ற மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக மாற்றி நாடு முழுவதும் சப்ளை செய்யப்படுகிறது.

இந்நிறுவனத்திற்கு சொந்தமான டேங்கர் லாரியில் தொழிற்சாலையின் கழிவுநீரை ஏற்றி சுள்ளி பாளையம், மெஜஸ்டிக் நகர் பகுதியில் சாலை யோரத்திலும் விவசாய நிலத்திலும் திறந்து விட்டதை அப்பகுதி மக்கள் பார்த்தனர்.

இதனால் கொதிப்படைந்த அப்பகுதி மக்கள் டேங்கர் லாரியை சிறை பிடித்ததுடன் அவர்களை விசாரித்தனர்.

அந்த டேங்கர் லாரி டிரைவர், தனியார் பால் நிறுவனத்துக்கு சொந்தமான இடத்தில் உள்ள மரக்கன்றுகளுக்கு தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருப்பதாக கூறியுள்ளார். இதை நம்பாத அப்பகுதி மக்கள் பாத்திரத்தில் தண்ணீரை பிடித்து பார்த்தபோது அது மஞ்சள் கலந்த நிறத்தில் இருந்ததுடன், ரசாயன வாடையும் அடித்ததால் அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து அப்பகுதி மக்கள், அந்த நீரில் உள்ள உப்புத்தன்மையை பரிசோதிக்கும் டி.டி.எஸ். கருவியை கொண்டு வந்து நீரில் உள்ள உப்பின் அளவை பரிசோதித்தனர். அந்த நீரில் 1048 டி.டி.எஸ். உப்பு இருந்தது கண்டறியப்பட்டது.

இதையடுத்து பெருந்துறை போலீசுக்கு தகவல் அளித்த அப்பகுதி மக்கள் டேங்கர் லாரியை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். பின்னர் சுள்ளிபாளையம் மற்றும் மெஜஸ்டிக் நகர் பகுதி மக்கள் சார்பில் போலீசில் அளிக்கப்பட்ட புகாரில் கூறியிருப்பதாவது:-

அண்மைக்காலமாக இந்த பால் உற்பத்தி நிறுவனத்தில் இருந்து வெளியேறும் புகையால் இப்பகுதி மக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. இந்த ஆலையின் கழிவு நீராலும் லாரியில் கொண்டு வந்து கொட்டும் கழிவு நீராலும் நிலத்தடி நீர் மாசுபடுகிறது. இதனை கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தனர்.

இதைத்தொடர்ந்து டேங்கர் லாரியை ஓட்டி வந்தவர்களிடமும், அந்த நிறுவனத்தின் அதிகாரி யையும் போலீசார் விசாரித்த போது, தனியார் பால் நிறுவனத்துக்கு சொந்தமான இடத்தில் வளர்க்கப்படும் மரக்கன்று களுக்கு தண்ணீர் ஊற்று வதற்காகவே டேங்கர் லாரி தண்ணீரை பயன்படுத்திய தாகவும், இனிமேல் அப்பகுதியில் தண்ணீரை விடுவதில்லை என எழுதிக் கொடுத்ததன் பேரில் அவர்களை எச்சரித்த போலீசார் டேங்கர் லாரியை விடுவித்தனர்.

இதுகுறித்து மாசு கட்டுப்பாட்டு வாரியம் மேற்கொண்ட நடவடிக்கை என்ன என்பதை அறிந்து கொள்ள பெருந்துறையில் உள்ள மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் வனஜாவை பலமுறை தொலைபேசியில் தொடர்பு கொண்ட போதும் தொலைபேசி அழைப்பை ஏற்கவில்லை. நேரில் சென்ற போதிலும் அவரை பார்க்க முடியவில்லை.

தனியார் பால் உற்பத்தி நிறுவனம் மீது தொடர்ந்து வரும் புகார்கள் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வேண்டுகோள் வைத்துள்ளனர்.

Tags:    

Similar News