பாவூர்சத்திரத்தில் மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதி வேன் உரிமையாளர் பலி
- காசி விஸ்வநாதன் சொந்தமாக வேன் வைத்து ஓட்டி வந்துள்ளார்.
- மோட்டார் சைக்கிள் மின் கம்பத்தில் மோதியதால் காசி விஸ்வநாதன் இறந்தது விசாரணையில் தெரியவந்தது.
தென்காசி:
பாவூர்சத்திரத்தில் பெருந்தலைவர் காமராஜர் தினசரி காய்கனி சந்தையின் கீழ்புறம் நெல்லை-தென்காசி நான்கு வழிச்சாலையோரத்தில் மின் கம்பத்தின் மீது மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் இறந்து கிடப்பதாக அவ்வழியே சென்ற பொதுமக்கள் பாவூர்சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். அதில், அந்த வாலிபர் கீழப்பாவூர் தேவர் வடக்கு தெருவை சேர்ந்த காசி விஸ்வநாதன் (வயது 38) என்பதும், சொந்தமாக வேன் வைத்து ஓட்டி வந்துள்ளார் என்பதும் தெரியவந்தது.
நேற்று இரவு தனது மோட்டார் சைக்கிளில் பாவூர்சத்திரம் புது மார்க்கெட் அருகே வந்தபோது, மின் கம்பத்தில் எதிர்பாராதவிதமாக மோதி அவர் இறந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரது உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.