ஓட்டேரி ஏரியின் நடுவில் செயற்கை தீவு அமைக்க முடிவு
- பயன்பாட்டுக்கு வராத பூங்கா
- அரசுக்கு திட்ட அறிக்கை அனுப்பப்பட உள்ளது
வேலூர்:
வேலூர் மாநகராட்சிக்கு ஒரு காலத்தில் குடிநீர் ஆதாரமாக இருந்த ஓட்டேரி ஏரி நீர்வரத்து இல்லாமல் வறண்டு காணப்பட்டது. கடந்தாண்டு பெய்த கனமழையால் சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு முழு கொள்ளளவை எட்டி உபரி நீர் வெளியேறியது.
பிரம்மாண்டமாக அமைந்திருக்கும் ஓட்டேரி ஏரிக்கரையில் மாநகராட்சி சார்பில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு நடைபயிற்சியுடன் கூடிய பூங்கா ரூ.1.25 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டது.
திறக்கப்படாமலேயே இருந்த பூங்கா மறு சீரமைப்புக்காக மீண்டும் ரூ.25 லட்சம் அளவுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தொடர்ந்து நிதி ஒதுக்கீடு செய்தும் பூங்கா மட்டும் இதுவரை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது.
இதன் காரணமாக, பூங்காவில் உள்ள சிறுவர்களுக்கான விளையாட்டு பொருட்கள், கட்டிடங்கள் பாழடைந்து வருகின்றன.
மேலும், புதர்கள் மண்டிக்கிடப்பதால் சமூக விரோதிகளின் கூடாரமாகவும் மாறி வருகிறது. குப்பை கொட்டும் இடமாகவும் மாறி வருகிறது. ஏறக்குறைய 2 கோடி ரூபாய் நிதியில் கட்டப்பட்ட பூங்கா பயன்ப டுத்தப்படாமல் பாழடைந்து வருகிறது.
பூங்காவை விரைவில் சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்நிலையில், ஓட்டேரி ஏரி ஏ.பி.நந்தகுமார் எம்.எல்.ஏ. காலை ஆய்வு மேற்கொண்டார். அப்போது, வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார், ஆணையர் அசோக்குமார், கவுன்சிலர் பாபி கதிரவன் உள்ளிட்டோர் உடினி ருந்தனர். பூங்காவை விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வருவது குறித்து ஆலோசனை நடத்தியதுடன், பூங்கா மற்றும் ஏரிக்கரை பகுதிகளில் ஆய்வு நடத்தப்பட்டது.
ஏரிக்கு நடுவில் செயற்கை தீவு அமைத்து அந்த இடத்தை பறவைகளின் புகலிட மாகவும் படகு சவாரி செய்யும் வசதியும் ஏற்படுத்த வேண்டும் என்ற யோசனையும் முன் வைக்கப்பட்டது.
இது தொடர்பாக மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார் கூறும்போது, ''பூங்காவில் வளர்ந்துள்ள புதர்களை அகற்றவும், வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்ப டவுள்ளது. பூங்காவில் 25 லட்சம் ரூபாய் அளவுக்கு பணிகள் முடிக்க வேண்டியுள்ளன.
அந்த பணிகளை விரைந்து முடிக்கவும் பொது மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஏரியில் செயற்கை தீவு அமைத்து பறவைகளின் புகலிடமாக மாற்றம் செய்வது குறித்து அரசுக்கு திட்ட அறிக்கை அனுப்பப்பட உள்ளது'' என்றார்.