அம்மன் கோவில் திருவிழாவை கட்டுப்பாடுகளுடன் நடத்த அனுமதி
- நரிக்குடி அருகே அம்மன் கோவில் திருவிழாவை கட்டுப்பாடுகளுடன் நடத்த அனுமதி வழங்கப்பட்டது.
- இரு தரப்பினரிடம் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.
திருச்சுழி
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி பகுதியில் அழகிய மீனாள் அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் வழிபாடு நடத்துவது தொடர்பாக பள்ளப்பட்டி கிராமத்தினருக்கும், நரிக்குடியில் ஒரு பிரிவை சேர்ந்தவர்களுக்கும் பிரச்சினை இருந்து வருகிறது.
இந்த நிலையில் பள்ளப்பட்டி கிராமத்தினர் கோவிலில் திருவிழா நடத்த முடிவு செய்தனர். இதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இது தொடர்பாக திருச்சுழி வட்டாட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டது.
இதையடுத்து இரு தரப்பினரையும் அழைத்து வட்டாட்சியர் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார். 2 மணி நேரம் நடந்த பேச்சு வார்த்தைக்கு பின் உடன்பாடு ஏற்பட்டது. அதன்படி கோவில் திருவிழாவை நடத்திக் கொள்வதும் என்றும், சில கட்டுப்பாடுகள் விதிக்கப் படவும் முடிவு செய்யப் பட்டது.
வருகிற 3-ந் தேதி மாலை 4 மணிக்கு கோவிலில் பள்ளப்பட்டி கிராமத்தை சேர்ந்த 5 பேர் மட்டும் பொங்கல் வைத்து சாமி கும்பிட வேண்டும். முக்கிய நிகழ்ச்சிகளின்போது மேள தாளம் இன்றி அமைதியான முறையில் வழிபாடு செய்ய வேண்டும் உள்ளிட்ட நிபந் தனைகள் விதிக்கப்பட்டது. இதற்கு இருதரப்பினரும் சம்மதம் தெரிவித்தனர்.
மேலும் புரட்டாசி மாத திருவிழா வழக்கமான நடைமுறைகளுடன் நடக்கும் எனவும், வைகாசி மாதத்தில் கோவில் திருவிழாவை அனைத்து ஊர் மக்களும் ஒன்று சேர்ந்து வழக்கமான நடைமுறையை பின்பற்றி நடத்துவது எனவும் கூட்டத் தில் முடிவு செய்யப் பட்டது. இதனை இரு தரப்பினரும் ஏற்றுக் கொண்டு அதிகாரிகள் முன்னிலையில் கையெழுத்திட்டனர்.
கூட்டம் முடிந்த பின் நேற்று மாலை பள்ளப்பட்டி கிராம மக்கள் கோவில் முன்பு காப்பு கட்டும் விழாவுக்காக வேப்பிலை கட்ட முயன்றனர். இதற்கு போலீசார் எதிர்ப்பு தெரிவித்ததால் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
தகவல் அறிந்த திருச்சுழி டி.எஸ்.பி. ஜெகநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தி வேப்பிலை தோரணத்தை கட்ட அனுமதி அளித்தனர். இதையடுத்து பள்ளப்பட்டி கிராம மக்கள் காப்பு கட்டி விரதத்தை தொடங்கினர்.
இதில் பெண்கள் உட்பட ஏராளமான கலந்து கொண்டனர். திருவிழாவை முன்னிட்டு கோவில் பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.