கணவர் விவாகரத்து கொடுக்காததால் கூலிப்படை ஏவி கொல்ல முயன்ற மனைவி- 4 பேர் கைது
- சிவகாமி, கணவரிடம் விவாகரத்து கேட்டு கோர்ட்டில் மனுத் தாக்கல் செய்து உள்ளார்.
- வழக்கில் தலைமறைவான மேலும் சிலரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
செங்குன்றம்:
கள்ளக்குறிச்சி மாவட்டம் பெருவாங்கூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் ராம கிருஷ்ணன் (33). கார் டிரைவர். இவரது மனைவி சிவகாமிஸ்ரீ. இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக 2 ஆண்டுகள் பிரிந்து வாழ்ந்து வருவதாக தெரிகிறது.
இந்த நிலையில் சிவகாமி, கணவரிடம் விவாகரத்து கேட்டு கோர்ட்டில் மனுத் தாக்கல் செய்து உள்ளார். ஆனால் ராமகிருஷ்ணன் மனைவியை பிரிய மனம் இல்லாததால் விவகா ரத்திற்கு சம்மதிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே கடந்த 28-ந்தேதி ராமகிருஷ்ணன் சென்னைக்கு சவாரி வந்தார். அப்போது அவரை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட மனைவி சிவகாமிஸ்ரீ பேச வேண்டும் என்று கூறி சோழவரம் அடுத்த ஜனப்பன்சத்திரம் கூட்டு சாலை கணேஷ் நகருக்கு வருமாறு அழைத்தார்.
ராமகிருஷ்ணன் அங்கு சென்ற போது 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த மர்ம கும்பல் திடீரென அவரை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்று விட்டனர். இதில் தலை, கையில் பலத்த வெட்டுக் காயம் அடைந்த ராமகிருஷ்ணன் ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
இது குறித்து சோழவரம் போலீசார் வழக்கு பதிவு செய்து அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். இதில் விவாகரத்து கொடுக்க மறுத்ததால் கணவரை மனைவி சிவகாமிஸ்ரீயே கூலிப்படை ஏவி கொலை செய்ய முயன்றது தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து சிவகாமி ஸ்ரீ, மதுரவாயல் ஏரிக்கரையைச் சேர்ந்த நவீன், மதுரவாயல் கிருஷ்ணா நகரை சேர்ந்த கெல்வின் ராஜ், அரும்பாக்கத்தை சேர்ந்த நித்திஷ் ராஜ் ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் தலைமறைவான மேலும் சிலரையும் போலீசார் தேடி வருகின்றனர்.