சென்னையில் சாலைகள் போடும் பணி மீண்டும் தொடங்கி உள்ளது- மேயர் பிரியா தகவல்
- சென்னை முழுவதுமாக 15 மண்டலங்களிலும் பேரணி தொடர்ந்து நடைபெற உள்ளது.
- அடுத்த தலைமுறைக்கு சமுதாயத்தை பாதுகாப்பது நம்முடைய கடமை.
சென்னை:
சென்னை ஜமாலியாவில் நெகிழி குப்பையை தவிர்த்தல் குறித்தான விழிப்புணர்வு பேரணியை இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தொடங்கி வைத்தார்.
இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி, மாணவ மாணவிகள் கலந்துகண்டு நெகிழி குப்பையை தவிர்க்க வேண்டும் என்று கையில் பதாகைகளை ஏந்தி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
சென்னை மாநகராட்சி மேயர் பிரியா மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். பின்னர் நிருபர்களிடம் மேயர் பிரியா கூறியதாவது:-
சென்னை மாநகராட்சியின் ஒவ்வொரு மண்டலங்களிலும் மாசு கட்டுப்பாடு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் நோக்கமாக இன்றைக்கு 15 மண்டலங்களிலும் பிளாஸ்டிக்கை எப்படி தவிர்ப்பது, அதை எப்படி ஒழிப்பது குறித்து பள்ளி மாணவர்களோடு நடைப்பயணம் துவங்கப்பட்டு இருக்கிறது.
சென்னை முழுவதுமாக 15 மண்டலங்களிலும் பேரணி தொடர்ந்து நடைபெற உள்ளது. பிளாஸ்டிக்கால் எந்த அளவு மாசு படுகிறது என்பதை பொதுமக்களுக்கு தெரிவிக்கும் வகையில் ஒவ்வொரு மாதமும் சனிக்கிழமை நான்காவது வாரம் இந்த பேரணி தொடர்ந்து ஆண்டு முழுவதும் நடைபெறும்.
அடுத்த தலைமுறைக்கு சமுதாயத்தை பாதுகாப்பது நம்முடைய கடமை. குப்பைகளும் எப்படி சேகரிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
பிளாஸ்டிக் குப்பைகளை போடுவதற்கு மெரினா, பெசன்ட் நகர் கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் தனி குப்பை தொட்டி வைக்கப்பட்டிருக்கிறது.
இது ஒவ்வொருவரிடமும் மாற்றம் கொண்டு வரும். தனி மனிதனின் மாற்றம் தான் சமுதாயத்தின் மாற்றமாக இருக்கும். பிளாஸ்டிக் பயன்படுத்து வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்.
சென்னை மாநகராட்சியை பொறுத்தவரையில் கடந்த ஆண்டு போடக்கூடிய சாலைகள் மழை காரணமாக சில பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட வேண்டிய சூழல் இருந்தது. அந்த பணிகள் மீண்டும் துவக்கப்பட்டு இருக்கிறது.
எதிர்க்கட்சி கொண்டு வந்த திட்டமாக இருந்தாலும் அம்மா உணவகம் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று அதற்கு தனியாக நிதி ஒதுக்கி பராமரிப்பு பணிகள் நடக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.