- காலை வேளையில் இஞ்சிச் சாற்றைப் பருகவேண்டும்.
- கடுக்காயின் சிறப்பு என்னவென்றால் உடலுக்குள் புகுந்திருக்கும் நோயைச் சாதுரியமாக வெளியேற்றிவிடுமாம்.
"காலையில் இஞ்சியும்
கடும்பகல் சுக்கும்
மாலையில் கடுக்காயும்
மண்டலம் உண்டு வந்தால்
கோலை ஊன்றிக் குறுகி நடப்போரும்
கோலை வீசிக் குலாவி நடப்பரே!"
என்று சித்தர் ஒருவர் பாட்டெழுதியிருக்கிறார்.
எனவே காலை வேளையில் இஞ்சிச் சாற்றைப் பருகவேண்டும். அதனை எப்படித் தயாரிப்பது?
இஞ்சியின் தோல்நீக்கிச் சாறெடுத்துச் சிறிதுநேரம் வையுங்கள்; அதன் அடியில் மாவு மாதிரி வெண்மையாகப் படிவதை நீக்கிவிட்டு, அச்சாற்றை மட்டும் வெறும் வயிற்றில் பருகுங்கள்.
இஞ்சிச் சாற்றைப் பருகுவதற்குப் பதிலாக இஞ்சியின் தோலை நீக்கிவிட்டு அதனைச் சிறு துண்டுகளாக்கித் தேனில் ஊறவைத்தும் சாப்பிடலாம். இதனை உண்டவுடனே காலை உணவை 'full'கட்டுக் கட்டாமல் அரைமணி/முக்கால் மணி நேரத்துக்குப் பிறகுக் காலை உணவைச் சாப்பிட வேண்டும்.
கடும்பகல் நேரத்தில் பொடித்து வைத்த சுக்கில் 1 தேக்கரண்டி எடுத்து அதே அளவு பனைவெல்லம் (கருப்பட்டி) கலந்து கொதிக்கவைத்துக் குடியுங்கள்.
கடும்பகலிலா?! நாங்கள் அலுவலகத்தில் வேலை பார்ப்பதா? இல்லை...சுக்கைச் சாப்பிட்டுக் கொண்டிருப்பதா? என்று அங்கலாய்ப்பவர்கள் மாலை நேரத்தில் காபி/டீக்கு பதிலாகச் சுக்கும் கருப்பட்டியும் கலந்து பருகலாம். வெறுமனே சுக்கையும் கருப்பட்டியையும் கலந்து குடிப்பதைவிடக் கொஞ்சம் பாலும் கலந்தால் சுவையாயிருக்குமே என்று நினைப்பவர்கள் சுக்குக் காபியாகக் கூடக் குடிக்கலாம்.
"சுக்குக்கு மிஞ்சிய மருந்துமில்லை; சுப்பிரமணியனுக்கு மிஞ்சிய தெய்வமுமில்லை" என்றொரு பழமொழியை எழுதிவைத்துச் சுக்கின் மகத்துவத்தை மக்குகளும் புரிந்துகொள்ள வழிவகுத்திருக்கின்றனர் நம் மக்கள்.
அடுத்தது கடுக்காய். மாலையில் கடுக்காய் என்று சித்தர் தம் பாடலில் குறிப்பிட்டிருந்தாலும் நாம் கடும் பகலில் சாப்பிட வேண்டிய சுக்கை மாலை நேரத்துக்கு மாற்றிவிட்டதால், உடனே கடுக்காய் சாப்பிடக் கூடாது. எனவே இரவு உணவுக்குப்பின் விதை நீக்கிப் பொடிசெய்யப்பட்ட கடுக்காயை ஒரு தேக்கரண்டி அளவுக்கு எடுத்து வெந்நீருடன் கலந்து சாப்பிடலாம்.
கடுக்காயின் சிறப்பு என்னவென்றால் உடலுக்குள் புகுந்திருக்கும் நோயைச் சாதுரியமாக வெளியேற்றிவிடுமாம். அதனால்தான் நம்பும்படி எதையாவது சொல்லி ஏமாற்றித் தப்பிவிடுவோரைக் 'கடுக்காய் கொடுத்துவிட்டான்' என்று கூறுகிறார்கள் போலிருக்கிறது.
"கடுக்காய் உண்டால் மிடுக்காய் வாழலாம்" என்ற பழமொழியும் கடுக்காயின் சிறப்பை எடுத்துக் காட்டுகிறது.
சரி…இஞ்சி, சுக்கு, கடுக்காய் இவற்றை எத்தனை நாட்களுக்குத் தொடர்ந்து சாப்பிடவேண்டும்?
"ஒரு மண்டலம்" என்கிறார் சித்தர்.
கமண்டலம் தெரியும்... அது என்ன மண்டலம் என்கிறீர்களா?
ஒரு மண்டலம் என்பது 48 நாள்கள்!
ஆக, 48 நாள்கள் இவை மூன்றையும் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் உடலிலுள்ள நோய்களெல்லாம் சொல்லாமல் கொள்ளாமல் 'எஸ்' ஆகிவிடுமாம்!
அப்புறமென்ன…? காலை நம்பாமல் கோலை நம்பி நடக்கும் நம்பியும் கோலை வீசிவிட்டுத் தன் சொந்தக் காலால் தெம்பாக நடப்பான் என்கிறார், பெயர் தெரியாத, இந்தச் சித்தர்.
மக்களே! அல்சர் உள்ளிட்ட வயிற்றுப் பிரச்சினை உள்ளவர்கள் இந்த விஷப் பரீட்சையில் இறங்க வேண்டாம். இஞ்சி, சுக்கு போன்றவற்றிலுள்ள காரம் அல்சரை அதிகப்படுத்திவிடும் அபாயமுண்டு!
"முயன்று பார்க்கலாம்" என நினைப்பவர்கள் அரைத் தேக்கரண்டி அளவுக்கு இவற்றைச் சாப்பிட்டு ஆட்டத்தை ஆரம்பியுங்கள்! வேறு உபாதைகள் ஏற்பட்டால் சாப்பிடுவதை நிறுத்திவிடுங்கள்! சித்தர் கோபித்துக்கொள்ளமாட்டார்!
-மேகலா இராமமூர்த்தி