கதம்பம்

காமராஜரின் திறமை!

Published On 2025-04-02 00:16 IST   |   Update On 2025-04-02 00:16:00 IST
  • ஒரு மாபெரும் தொழிற்சாலையை இந்தியாவில் நிர்மாணித்து தர ஒரு செக் நாட்டு நிறுவனம் முன்வந்தது.
  • மத்திய அரசு துறை அதிகாரிகளும், செக்நாட்டு தொழில் முனைவர்களும் இணைந்து தமிழகத்தில் பொருத்தமான இடம் தேடி வலம் வந்தனர்.

கனரக கொதிகலன் தொழிற்சாலை என்ற மிகுமின் அழுத்த சக்தி மூலம் செயல்படும் ஒரு மாபெரும் தொழிற்சாலையை இந்தியாவில் நிர்மாணித்து தர ஒரு செக் நாட்டு நிறுவனம் முன்வந்தது. இதை தமிழகத்தில் தொடங்க, மத்திய அரசிடம் ஒப்புதல் வாங்கி வந்தார் காமராஜர். மத்திய அரசு துறை அதிகாரிகளும், செக்நாட்டு தொழில் முனைவர்களும் இணைந்து தமிழகத்தில் பொருத்தமான இடம் தேடி வலம் வந்தனர்.

பரந்த வெளி, தூய்மையான நீர், தேவையான மின்சக்தி, போக்குவரத்துக்கான தொடர்வண்டி வசதி இத்தனையும் கூடிய ஓர் இடத்தைத் தமிழக அதிகாரிகளால் காட்டமுடியவில்லை. அலைந்து சோர்ந்து போன செக் நாட்டு தொழில் முனைவர்கள் அத்தொழில்கூடமமைக்க தமிழகத்தில் தக்க இடமில்லை என்ற முடிவெடுத்துக் கிளம்பத் தயாரானார்கள்.

இதைக் கேள்வியுற்ற காமராஜர் அவர்களையும் உடன் சென்றாய்ந்த நம்மவர்களையும் அழைத்தார். அமைதியாக விசாரித்தார். அதிகாரிகள் சுட்டி காட்டிய இடங்களையும் உடன் விசாரித்தார். அதிகாரிகள் சென்று காட்டிய இடங்களைப் பட்டியலிட்டனர். அவர்கள் கேட்க்கும் வசதிகள் ஒரு சேர அமைந்த இடத்தைக் காட்ட முடியவில்லை என்றனர்.

ஆனால் தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்தின் மூலை முடுக்குகளையெல்லாம் தமது சுற்றுபயணங்கள் மூலம் நன்கறிந்திருந்த காமராஜர் ஒரு கணம் சிந்தித்து விட்டுக் "காவிரியாற்றங்கரையில் திருவெறும்பூர் என்ற ஊர் இருக்கிறதே, அந்த இடத்தைக் காட்டினீர்களா?", அதிகாரிகள் இல்லையென்று தலையாட்டினார்கள்.

"ஏன்?… இவங்க கேட்டிற எல்லா வசதிகளும் அங்கே இருக்கே, போய் முதல்ல அந்த இடத்தை காட்டிட்டு எங்கிட்ட வாங்க" என்றார்.

என்ன ஆச்சர்யம்! அந்த இடத்தைப் பார்வையிட்ட செக் நாட்டு வல்லுனர்களுக்கு அந்த இடம் எல்லா வகைகளிலும் பொருத்தமான இடமாக தொன்றியது.

அங்கு உருவாகி இன்று உலக நாடுகளுக்கு தன் செய்பொருளை ஏற்றுமதி செய்யும் "பெல்" என்றழைக்கப்படும் பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் (BHEL) என்ற பெருமைவாய்ந்த நிறுவனமே அது.

காமராஜர் ஆட்சிப் பொறுப்பேற்ற சில ஆண்டுகள் வரை எதிர்கட்சி மேடைகளில் அவர் உயர்நிலைப் படிப்பைக் கூட முடிக்காதவர், இவருக்கு ஆளும் ஆற்றல் எப்படியிருக்கும் என்று கிண்டல் வார்த்தைகளை வீசியதுண்டு.

அப்போது காமராஜர் மிக அடக்கமாக கூறினார், "பூகோளம் என்பது நதிகள், மலைகள், பயிர் வகைகள், மக்கள் வாழ்க்கை என்பதைக் பற்றிக் கூறும் கல்வி என்றால் பலரைவிட நான் நன்கறிவேன். புத்தகப் படிப்புதான் பூகோளம் என்றால் அது எனக்குத் தெரியாது, அது எனக்குத் தேவையும்மில்லை".

-சந்திரன் வீராசாமி

Tags:    

Similar News