கர்நாடகாவில் 18 பாஜக எம்.எல்.ஏ.க்கள் 6 மாதம் சஸ்பெண்டு.. அவையில் இருந்து குண்டுக்கட்டாக அகற்றம்
- சபாநாயகர் யுடி காதர் அமர்ந்திருந்த இருக்கை அருகே சென்று மசோதா நகலை கிழித்து அவர் மீது வீசினர்.
- ஒவ்வொருவராக தூக்கிச் சென்று சபையிலிருந்து வெளியேற்றினர்.
கர்நாடக சட்டமன்ற நடவடிக்கைகளை சீர்குலைத்ததற்காக எதிர்க்கட்சியான பாஜகவைச் சேர்ந்த 18 உறுப்பினர்களை 6 மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் யு.டி.காதர் உத்தரவிட்டுள்ளார்.
அரசு ஒப்பந்தங்கள் மற்றும் டெண்டர்களில் முஸ்லிம்களுக்கு 4 சதவீதம் இடஒதுக்கீடு தரும் மசோதா இன்று கர்நாடக சட்டமன்றத்தில் பெரும்பான்மை காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஆதரவில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக எம்எல்ஏக்கள் கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டனர். மேலும் அரசியல்வாதிகள் மீதான ஹனி டிராப் மோசடி முயற்சிகள் குறித்தும் அவர்கள் கேள்வி எழுப்பினர்.
சில பாஜக எம்எல்ஏக்கள் சபாநாயகர் யுடி காதர் அமர்ந்திருந்த இருக்கை அருகே சென்று மசோதா நகலை கிழித்து அவர் மீது வீசினர். மேலும் சித்தராமையா மற்றும் டிகே சிவகுமாருக்கு எதிராக கோஷங்களை எழுப்பி அவர்கள் அமளியில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து சட்டமன்ற விதி 348 இன் கீழ், அவை நடவடிக்கைகளை சீர்குலைத்ததற்காகவும், உத்தரவைப் பொருட்படுத்தாமல், ஒழுங்கற்று மரியாதைக் குறைவான முறையில் நடந்து கொண்டதற்காகவும் 18 பாஜக எம்எல்ஏக்களை 6 மாத காலத்திற்கு அவையில் இருந்து உடனடியாக இடைநீக்கம் செய்வதாக சபாநாயகர் அறிவித்தார்.
இடைநீக்கம் செய்யப்பட்டவர்களின் பெயர்களை சபாநாயகர் கூறிக் கொண்டிருந்தபோது, அவர்கள் வெளியேறாததால், பாதுகாப்பு அதிகாரிகள் அவர்களை ஒவ்வொருவராக தூக்கிச் சென்று சபையிலிருந்து வெளியேற்றினர்.