ஊழலை மறைக்க மொழியின் பெயரால் விஷத்தை பரப்புகிறார்கள் - திமுக மீது அமித் ஷா நேரடி தாக்குதல்
- ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் உள்ள மொழியை நீங்கள் விரும்புகிறீர்கள், ஆனால் இந்திய மொழியை நீங்கள் விரும்பவில்லை.
- மொழியின் பெயரால் உங்கள் ஊழலையும் மறைக்க முயற்சிக்கிறீர்கள். நாங்கள் உங்களை அம்பலப்படுத்துவோம்.
இன்று நடந்த பாராளுமன்ற கூட்டத்தொடரின்போது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மாநிலங்களவையில் உரையாற்றினார். அப்போது தேசிய கல்விக்கொள்கையில் (NEP) உள்ள மும்மொழிக் கொள்கையை இந்தி திணிப்பு என குற்றம்சாட்டி, தமிழ்நாடு ஏற்க மறுப்பது குறித்து காட்டமான கருத்துக்களை அமித் ஷா தெரிவித்துள்ளார்.
அவையில் அமித் ஷா கூறியதாவது, அவர்கள் தங்கள் ஊழலை மறைக்க மொழியின் பெயரால் கடை விரிக்கிறார்கள். ஒவ்வொரு மொழியும் நாட்டின் ரத்தினம் போன்றது. நாங்கள் தென் மாநில மொழிகளுக்கு எதிரானவர்கள் என அவர்கள் சொல்ல விரும்புகிறீர்களா?..
மொழியின் பெயரால் அரசியல் செய்பவர்கள், தனிக்கப்பட்ட உள்நோக்கம் கொண்டிருக்கிறார்கள். பொறியியல் மற்றும் மருத்துவத் தேர்வுகளை தமிழில் நடந்த (தமிழ்நாடு அரசுக்கு) தைரியம் இல்லை.
அவர்கள் மொழியின் பெயரால் விஷத்தைப் பரப்புகிறார்கள். ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் உள்ள மொழியை நீங்கள் விரும்புகிறீர்கள், ஆனால் இந்திய மொழியை நீங்கள் விரும்பவில்லை.
மொழியின் பெயரால் நாட்டைப் பிரிக்கக் கூடாது. உங்கள் தவறுகளையும், மொழியின் பெயரால் உங்கள் ஊழலையும் மறைக்க முயற்சிக்கிறீர்கள். நீங்கள் வளர்ச்சி பற்றிப் பேச வேண்டும். நாங்கள் உங்களை அம்பலப்படுத்துவோம், உங்கள் தவறுகளை அம்பலப்படுத்த ஒவ்வொரு கிராமத்திற்கும் செல்வோம் என்று பேசியுள்ளார்.
மும்மொழிக் கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழ்நாட்டுக்கான ரூ.2000 கோடி கல்வி நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.