சம்பளம் குறைக்கப்பட்டதால் ஆத்திரம்.. பஸ்சுக்கு தீ வைத்த ஓட்டுநர் - 4 பேர் உயிரிழப்பு
- ஓட்டுநர் ஜனார்தன் ஹம்பர்டேகர் ஓடும் பேருந்தில் குதித்து உள்ளார்.
- சிகிச்சைக்கு பின்னர் அவர் கைது செய்யப்படுவார் என்று காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் தனியார் நிறுவன மினிபஸ்சில் தீ விபத்து ஏற்பட்டதில் 4 ஊழியர்கள் உயிரிழந்தனர். இந்த தீ விபத்து சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர்.
இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை துணை ஆணையர் விஷால் கெய்க்வாட் கூறுகையில்,
ஊழியர்கள் உயிரிழப்பிற்கு தீ விபத்து காரணமல்ல... நாசவேலை தான் காரணம் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்த சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட ஓட்டுநர் ஜனார்தன் ஹம்பர்டேகர், ஏற்கனவே சில ஊழியர்களுடன் தகராறு செய்ததாகவும், அவர்களை பழிவாங்க விரும்பியதும் தெரிய வந்துள்ளது. மேலும் சம்பள குறைப்பில் அதிருப்தியில் இருந்த அவர் பஸ்சுக்கு தீ வைத்தது தெரிய வந்துள்ளது.
இறந்த நால்வரில் அவர் மீது வெறுப்பு கொண்டிருந்த ஊழியர்கள் இல்லை என்றும் காவல்துறை துணை ஆணையர் கூறினார்.
புனே நகருக்கு அருகிலுள்ள ஹின்ஜாவாடி பகுதியில் வ்யோமா கிராபிக்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான பஸ் 14 ஊழியர்களை பணியிடத்திற்கு ஏற்றிச்சென்றது.
குற்றம் சாட்டப்பட்டவர் பென்சீனை (அதிகமாக எரியக்கூடிய ரசாயனம்) வாங்கியிருந்தார். டோனர்களைத் துடைக்கப் பயன்படுத்தப்படும் துணியையும் அவர் பஸ்சில் வைத்திருந்தார். நேற்று பஸ் ஹின்ஜாவாடி அருகே வந்தபோது, அவர் தீப்பெட்டியை ஏற்றி துணியை தீ வைத்துக் கொளுத்தினார்.
ஓட்டுநர் ஜனார்தன் ஹம்பர்டேகர் ஓடும் பஸ்சில் இருந்து குதித்து உள்ளார். அவர் வெளியே வருவதற்கு முன்பே தீக்காயமடைந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
அவசரகால வெளியேறும் கதவை சரியான நேரத்தில் திறக்க முடியாததால் 4 ஊழியர்கள் இறந்தனர். மேலும், 6 பயணிகளுக்கு தீக்காயங்கள் ஏற்பட்டன.
ஓட்டுநர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சிகிச்சைக்கு பின்னர் அவர் கைது செய்யப்படுவார் என்று காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.