நீதித்துறையில் ஊழல் மிகத்தீவிரமான பிரச்சனை - மூத்த வழக்கறிஞர் கபில் சிபல்
- வீட்டில் கட்டுக்கட்டாக பணம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
- யஸ்வந்த் வர்மா அலகாபாத் உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார்.
உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த யஸ்வந்த வர்மா டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்தார். டெல்லியில் தனது குடும்பத்தாருடன் வசித்து வந்த நிலையில், நீதிபதி யஸ்வந்த வர்மா வீட்டில் சமீபத்தில் தீ விபத்து ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து அவரது வீட்டில் இருந்தவர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் வீட்டில் கொளுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்த தீயை கட்டுப்படுத்தி தீ முழுமையாக அணைக்கப்பட்டுள்ளதா என்பதை சரிபார்த்தனர். அப்போது, அவரது வீட்டில் கட்டுக்கட்டாக பணம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும், பணம் இருப்பதுபற்றி உச்சநீதிமன்றத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா விசாரணை நடத்தினார். பிறகு கொலிஜியம் உறுப்பினர்களுடனும் ஆலோசனை நடத்தினார்.
அதன் அடிப்படையில் டெல்லி ஐகோர்ட் நீதிபதி பதவியில் இருந்து யஸ்வந்த் வர்மா விடுவிக்கப்பட்டு, அலகாபாத் உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார். ஊழல் முறைகேடு தொடர்பான புகாரில் சிக்கிய நிலையில், நீதிபதி பணியிட மாற்றம் செய்யப்பட்டு இருப்பது தொடர்பாக மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் கூறும் போது, "நீதித்துறையில் ஊழல் விவகாரம் மிகப்பெரிய பிரச்சனை. மூத்த வழக்கறிஞர்கள் மற்றும் நீதித்துறையை சார்ந்தவர்கள் இதுப்பற்றி பேசுவது முதல்முறை அல்ல. இது பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது"
"நியமனங்கள் எப்படி செய்யப்படுகின்றன என்பதை கண்காணிக்க உச்சநீதிமன்றத்திற்கு இதுதான் தக்க தருணம். நியமன விவகாரங்கள் வெளிப்படையாகவும், மிகவும் கவனமாகவும் மேற்கொள்ளப்பட வேண்டும். ஊழல் மிகவும் தீவிரமான விவகாரம், பிரதமர் மோடி என்ன கூறினாலும் ஊழல் அதிகரித்துவிட்டது," என்று கூறினார்.