மணிப்பூர்: நிவாரண முகாமில் ரத்தக் காயங்களுடன் சடலம்.. காணாமல் போன 9 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்
- சிறுமியின் கழுத்து மற்றும் உடலின் பிற பகுதிகளில் ரத்தக் காயங்கள் இருந்தன.
- இந்த முட்டாள்தனமான செயல் மனிதகுலத்திற்கு எதிரான ஒரு மிகப்பெரிய குற்றமாகும்
மணிப்பூர் மாநிலம் சூரசந்த்பூரில் உள்ள லான்வா டிடி பிளாக் நிவாரண முகாமுக்குள் 9 வயது சிறுமி சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாதிக்கப்பட்ட சிறுமி நேற்று மாலை 6:30 மணியளவில் காணாமல் போனாள். நேற்று நள்ளிரவு சிறுமியின் உடல் மீட்கப்பட்டது.
சிறுமி காணாமல் போனதும், அவளது பெற்றோரும், முகாமில் வசிப்பவர்களும் தீவிர தேடுதலைத் தொடங்கினர். தொடர்ந்து நிவாரண முகாமின் வளாகத்திற்குள் காயங்களுடன் கிடந்த சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. சிறுமியின் கழுத்து மற்றும் உடலின் பிற பகுதிகளில் ரத்தக் காயங்கள் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால் சிறுமி பாலியல் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதுதொடர்பாக போக்ஸோ வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
2023 முதல் மணிப்பூரில் இரண்டு சமூகளுக்கிடையே நடந்து வரும் கலவரத்தில் 250 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். கடந்த வருட இறுதியில் ஆயுதமேந்திய கிளர்ச்சியாளர்களால் கலவரம் தீவிரமடைந்தது. கடந்த பிப்ரவரி 9 ஆம் தேதி ஆளும் பாஜக முதல்வர் பைரன் சிங் பதவி விலகினார். இதைத்தொடர்ந்து குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
சிறுமியின் மரணம் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ள முன்னாள் முதல்வர் பைரன் சிங், இந்த முட்டாள்தனமான செயல் மனிதகுலத்திற்கு எதிரான ஒரு மிகப்பெரிய குற்றமாகும், மேலும் குற்றவாளிகள் தாமதமின்றி நீதியின் முன் நிறுத்தப்படுவதை உறுதி செய்யுமாறு அதிகாரிகளை நான் கேட்டுக்கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.