செய்திகள்

மிஸ்டர் யுனிவர்ஸ் மனோர் ஆச் மறைவிற்கு மேற்கு வங்க ஆளுநர், முதல்வர் மம்தா பானர்ஜி ஆழ்ந்த இரங்கல்

Published On 2016-06-06 00:09 IST   |   Update On 2016-06-06 00:09:00 IST
இந்தியாவின் முதல் மிஸ்டர் யுனிவர்ஸ் பட்டம் வென்றவரான மனோர் ஆச் மறைவிற்கு மேற்கு வங்க ஆளுநர், முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.
கொல்கத்தா:

பாடி பில்டிங் பிரிவில் மிஸ்டர் யுனிவர்ஸ் பட்டத்தை வென்ற முதல் இந்தியரான மனோகர் ஆச், வயது மூப்பு காரணமாக, மரணமடைந்தார். அவருக்கு வயது 104.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்த மனோகர் ஆச், இந்திய சுதந்திரத்திற்குப் பின்னர், கடந்த 1952ம் ஆண்டில் பாடி பில்டிங் போட்டியில் பங்கேற்று, மிஸ்டர் யுனிவர்ஸ் என்ற பட்டத்தை வென்றார். இதன்மூலமாக, பாடி பில்டிங் பிரிவில் முதல்முறையாக சர்வதேச பட்டம் வென்ற இந்தியர் என்ற பெருமையையும் பெற்றார். அத்துடன், பாடி பில்டிங் தொடர்பாக, ஏராளமான சர்வதேசப் போட்டிகளிலும் மனோகர் ஆச் பங்கேற்றுள்ளார்.

4 அடி 11 அங்குலம் உயரம் கொண்ட மனோகர் ஆச், கட்டுமஸ்தான உடலமைப்பு காரணமாக, அப்போதைய பிரிட்டிஷ் விமானப் படையிலும் பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், மனோகர் ஆச்சின் மறைவிற்கு மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

104 வயதான உலக புகழ் பெற்ற பாடி பில்டர் மனோகர் ஆச் மதியம்(நேற்று) உயிரிழந்தார். அவரது மரணத்தை தொடர்ந்து ஒரு வரலாற்று சகாப்தம் முடிவுக்கு வந்துள்ளது. அவரது மறைவு நம்மில் ஆழ்ந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் நம்மை பெருமை படுத்தியுள்ளார்.

கடந்த 2015-ம் ஆண்டு பங்காபி பூஷன் விருது அளித்து எங்களது அரசு கௌரவித்தது. அவரது ஆன்மா சாந்தியடையட்டும். அவரை இழந்துவாடும் குடும்பத்தினருக்கு எனது இரங்கலை உரித்தாக்குகிறேன்.

இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேற்கு வங்க ஆளுநர் கேஷாரி நாத் திரிபாதி தமது இரங்கல் செய்தியில், மனோகர் ஆச் பாடி பில்டிங்கின் ஜாம்பவான் என்று கூறியுள்ளார்.

Similar News