செய்திகள்

காங்கிரஸ் கட்சியில் இருந்து மூத்த தலைவர் குருதாஸ் காமத் ராஜினாமா

Published On 2016-06-06 22:42 IST   |   Update On 2016-06-06 22:42:00 IST
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான குருதாஸ் காமத், அக்கட்சியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார்.
மும்பை:

மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவர் குருதாஸ் காமத். இவர் முன்னாள் மத்திய மந்திரியாக இருந்தவர். 2009-11 காலத்தில் மத்திய உள்துறை இணை மந்திரியாக பதவி வகித்தார்.

61 வயதான குருதாஸ் காமத் கடந்த 44 வருடங்களாக காங்கிரஸ் கட்சிக்காக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், குருதாஸ் காமத் காங்கிரஸ் கட்சியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார். தனக்கு அடுத்து உள்ளவர்களுக்கு இடம் கொடுத்து விலகி நிற்க விரும்புவதாக அவர் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், “கடந்த 10 நாட்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தியை சந்தித்ததாகவும், அப்போது ராஜினாமா செய்ய விரும்புவதை தெரிவித்ததாகவும் கூறினார்.

மேலும் ”ராஜினாமா தொடர்பாக சோனியா காந்தி மற்றும் ராகுல்காந்திக்கு கடிதம் அனுப்பியுள்ளேன். முறைப்படி தகவல் அளித்தும் இன்னும் பதில் ஏதும் வரவில்லை. நான் அரசியலில் இருந்து ஓய்வு பெற விரும்புகிறேன்” என்றும் தெரிவித்தார்.

இதுவரை தனக்கு ஆதரவு அளித்த, ஒத்துழைத்த ஒவ்வொருவருக்கும், கட்சிக்கும் தனது நன்றியையும் கூறியுள்ளார்.

கடந்த மக்களவை தேர்தலில் மும்பை வடகிழக்கு தொகுதியில் போட்டியிட்ட குருதாஸ், பா.ஜ.க. வேட்பாளரிடம் தோல்வியை தழுவினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News