செய்திகள்

கர்நாடகாவில் தீவிரமடைகிறது அரசு போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம்: கோரிக்கையை ஏற்க அரசு மறுப்பு

Published On 2016-07-26 03:57 IST   |   Update On 2016-07-26 03:57:00 IST
கர்நாடகத்தில் ஊதிய உயர்வு வழங்கக்கோரிய அரசு போக்குவரத்து ஊழியர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தம் தீவிரமடைந்துள்ளது. தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்க கர்நாடகா அரசும் மறுப்பு தெரிவித்துள்ளது.
பெங்களூர்:

கர்நாடக அரசு போக்குவரத்து துறை ஊழியர்களுக்கு 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய விகிதம் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன்படி போக்குவரத்து ஊழியர்களுக்கு இப்போது 8 சதவீத ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று அரசு அறிவித்தது.

இதற்கு போக்குவரத்து ஊழியர்கள் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. 35 சதவீத ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி 25-ந் தேதி (நேற்று) முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக போக்குவரத்து ஊழியர்கள் சங்கங்கள் அறிவித்தன.

இந்த நிலையில் ஊழியர்கள் சங்க பிரதிநிதிகளுடன் மாநில அரசு நடத்திய பேச்சுவார்த்தையில் 8 சதவீத ஊதிய உயர்வை 10 சதவீதமாக உயர்த்தி வழங்குவதாக அறிவிக்கப்பட்டது.

இதனை ஏற்று வேலை நிறுத்த போராட்டத்தை கைவிடும்படியும் ஊழியர்கள் சங்கங்களை முதல்-மந்திரி சித்தராமையா கேட்டுக் கொண்டார். ஆனால் இதனை ஊழியர் சங்கம் ஏற்க மறுத்து விட்டன.

இந்த நிலையில் ஒரு நாள் முன்னதாகவே நேற்று முன் தினம் முதலே பெங்களூரு உள்பட பெரும்பாலான பகுதிகளில் போக்குவரத்து கழக ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.

இதனால் பெரும்பாலான அரசு பஸ்கள் நிறுத்தப்பட்டன. மடிவாளா, எலெக்ட்ரானிக் சிட்டி, கெங்கேரி, ஒயிட்பீல்டு உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் நேற்று பஸ்கள் ஓடவில்லை. ராஜாஜிநகர் உள்பட ஒரு சில பகுதிகளில் பஸ்கள் ஓடின.

போக்குவரத்து ஊழியர்களின் போராட்டத்தினால் மாணவ-மாணவிகள் பாதிக்கப்படாமல் இருக்க கர்நாடக மாநிலத்தில் பள்ளி-கல்லூரிகளுக்கு நேற்றும் (திங்கட்கிழமை), இன்றும் (செவ்வாய்க்கிழமை) 2 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது.

இந்நிலையில், கர்நாடக மாநில அரசு போக்குவரத்து துறையை சேர்ந்த நான்கு தொழிற்சங்கங்களை சேர்ந்தவர்கள் காலவரையற்ற போராட்டத்தை கைவிட வேண்டும் என்ற அரசின் கோரிக்கையை நிராகரித்துள்ளனர். 

35 சதவீத ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்ற தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்க மாநில அரசு மறுத்துவிட்டதே இதற்கு காரணம் ஆகும்.

இதனிடையே பல்வேறு இடங்களில் பேருந்துகள் மீது கல்வீச்சு தாக்குதல் நடைபெற்றுள்ளது. சில இடங்களில் தீ வைப்பு சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன.

Similar News