செய்திகள்
கேரள முன்னாள் மந்திரி கே.எம்.மாணி மீதான மதுபார் லஞ்ச வழக்கில் மேல் விசாரணை: கோர்ட்டு உத்தரவு
கேரள முன்னாள் மந்திரி கே.எம்.மாணி மீதான மதுபார் லஞ்ச வழக்கில் மேல் விசாரணை நடத்துமாறு நேற்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
திருவனந்தபுரம்:
கேரளாவில், உம்மன் சாண்டி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசு நடந்தபோது, கேரள காங்கிரஸ் (எம் பிரிவு) தலைவர் கே.எம்.மாணி, நிதி மந்திரியாக இருந்தார். அப்போது, ஓட்டல்களில் மூடப்பட்டிருந்த மதுபார்களை மீண்டும் திறப்பதற்கான அனுமதிக்காக, கே.எம்.மாணிக்கு ஓட்டல் மதுபார் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் ரூ.1 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டதாக அச்சங்கத்தின் செயல் தலைவர் பிஜு ரமேஷ் குற்றம் சாட்டினார். அதன்பேரில், மாணி உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கு விசாரணை, திருவனந்தபுரத்தில், ஊழல் வழக்குகளுக்கான தனிக்கோர்ட்டில் நடந்து வருகிறது.
இந்த வழக்கை ஊழல் கண்காணிப்பு இயக்குனராக இருந்த சங்கர் ரெட்டி சீர்குலைக்க முயன்றதாகவும், எனவே, மேற்கொண்டு விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் கோரி, ஊழல் கண்காணிப்பு போலீஸ் சூப்பிரண்டு சுகேசன், தனிக்கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அதை விசாரித்த நீதிபதி சப்ருதின், இந்த வழக்கில் புதிதாக மேல்விசாரணை நடத்துமாறு நேற்று உத்தரவிட்டார்.
இதை வரவேற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மூத்த தலைவர் அச்சுதானந்தன், இந்த விவகாரத்தில், அப்போதைய முதல்-மந்திரி உம்மன் சாண்டி, உள்துறை மந்திரியாக இருந்த ரமேஷ் சென்னிதாலா ஆகியோரின் தொடர்பு பற்றியும் விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.