செய்திகள்

காஷ்மீரில் அமைதியை ஏற்படுத்த எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள்: மெகபூபா முப்தி கோரிக்கை

Published On 2016-08-28 10:14 IST   |   Update On 2016-08-28 10:14:00 IST
காஷ்மீர் நிலவிவரும் பதற்றத்தை கட்டுப்படுத்தி அமைதியை ஏற்படுத்த எனக்கு ஒருமுறை வாய்ப்பளியுங்கள் என அம்மாநில முதல் மந்திரி மெஹ்பூபா முப்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புதுடெல்லி:

காஷ்மீர் மாநிலம் அனந்தநாக் மாவட்டத்தில் கடந்த மாதம் 9-ந்தேதி ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்கத் தளபதி பர்கான் வானி என்பவர் பாதுகாப்பு படையினருடன் நடந்த துப்பாக்கி சண்டையில் கொல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து அங்கு வன்முறை வெடித்தது.

பிரிவினைவாதிகளும், ஆர்ப்பாட்டக்காரர்களும் தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டு வருவதால் அங்கு ராணுவம் குவிக்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் மாநில முதல்–மந்திரி மெகபூபா டெல்லியில் பிரதமர் மோடியை நேற்று சந்தித்து பேசினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,“தெருக்களில் போராட்டம் நடத்துபவர்களுக்கு நான் கோரிக்கை விடுக்கின்றேன். நீங்கள் என் மீது கோபம் கொண்டு இருக்கலாம், நானும் ஒருவேளை உங்கள் மீது கோபம் கொண்டு இருக்கலாம். உங்களுடைய கவலைகளை தீர்த்து, எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற எனக்கு ஒரு வாய்ப்பளியுங்கள்,” என்றார்.

காஷ்மீர் பள்ளத்தாக்கில் அமைதியற்ற சூழல் நீடிப்பதற்கு பாகிஸ்தான் அரசுதான் காரணம். அவர்கள்தான் பிரச்சினையை தூண்டிவிடுகின்றனர் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

காஷ்மீரில் 95 சதவீத மக்கள் அமைதியை விரும்புகிறார்கள். வன்முறையில் ஈடுபடுவோர் வெறும் 5 சதவீதம்தான். ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த இளைஞர்களே வன்முறையில் ஈடுபடுத்தப்படுகின்றனர். அவர்கள்தான் கொல்லப்படுகின்றனர். அவர்களை தூண்டிவிடுபவர்கள் தப்பிவிடுகின்றனர். மாநிலத்தில் அமைதி திரும்புவதற்கு அனைத்து தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கிறோம். காஷ்மீர் இளைஞர்களின் உயிரைக் காப்பாற்ற பிரிவினைவாதிகள உதவிட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Similar News