செய்திகள்

ஓடும் பஸ்சில் பெண் மரணம்: கைக்குழந்தையுடன் நடுகாட்டில் இறக்கிவிடப்பட்ட குடும்பத்தினரின் துயரநிலை

Published On 2016-08-28 12:21 IST   |   Update On 2016-08-28 12:21:00 IST
மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் ஓடும் பஸ்சுக்குள் ஒரு பெண் இறந்ததால் கொட்டும் மழையில், அடர்ந்த காட்டுப்பகுதியில் பிரேதத்தையும் இறந்தவரின் கைக்குழந்தையுடன் கணவர் மற்றும் அவரது தாயாரையும் அந்த பஸ்சின் கண்டக்டர் இறக்கிவிட்ட மிருகத்தனம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தூர்:

மத்தியப்பிரதேசம் மாநிலம், சத்தார்புர் மாவட்டத்தை சேர்ந்த ராம் சிங் லோதி என்பவருடைய மனைவியான மல்லி பாய்-க்கு கடந்தவாரம் அழகான பெண் குழந்தை பிறந்தது. குழந்தைபெற்றப் பின்னர் உடல்நிலை பாதிக்கப்பட்ட மனைவியை அருகாமையில் உள்ள தமோ நகரில் இருக்கும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்ல ராம் சிங் தீர்மானித்தார்.

தனது தாயாரின் துணையுடன் பிறந்து ஐந்து நாளேஆன கைக்குழந்தையையும் தூக்கி கொண்டு கடந்த வியாழக்கிழமை ஒரு தனியார் பஸ்சில் ராம் சிங் லோதி தமோ நகருக்கு புறப்பட்டு சென்றார்.

பஸ்சில் சென்று கொண்டிருக்கும்போதே உடல்நிலை மேலும் மோசமான மல்லி பாய் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து, அதிர்ச்சியடைந்த கண்டக்டர், அடர்ந்த காட்டுப்பகுதி என்றுகூட பார்க்காமல் இறந்த பெண்ணின் உடலை எடுத்துக்கொண்டு ராம் சிங்கின் குடும்பத்தாரை பஸ்சில் இருந்து கீழேஇறங்கும்படி கூறியுள்ளார்.

தனது கைக்குழந்தை, இறந்த மனைவியின் பிணம் மற்றும் வயதான தாயாருடன் காட்டுப்பகுதியில் கொட்டும் மழையில் நனைந்தபடி ராம் சிங் செய்வதறியாது நின்று கொண்டிருந்தார்.

சிறிது நேரத்துக்கு பின், அவ்வழியாக வந்த இருவழக்கறிஞர்கள், பிரேதத்துடன் நடுக்காட்டில்  நின்றுகொண்டிருந்த இவர்களைப் பார்த்து, பரிதாபப்பட்டு, போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், ராம் சிங்கிடம் இதுபற்றி விசாரித்ததுடன், அவருக்கு எந்த உதவியும் செய்ய முன்வரவில்லை என கூறப்படுகிறது.

பின்னர், அந்த வழக்கறிஞர்களே ஒரு டாக்சியை ஏற்பாடு செய்து மல்லி பாயின் பிரேதத்துடன் அவர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பான செய்தி சமூக வலைத்தளங்கள் மற்றும் ஊடகங்களின் வாயிலாக வெளியுலகுக்கு தெரியவந்ததும், விரைந்து நடவடிக்கை எடுத்த போலீசார், இச்சம்பவத்துக்கு காரணமான டிரைவர், கண்டக்டரை கைதுசெய்து வழக்குப்பதிவு செய்ததுடன் அந்த பஸ்சையும் பறிமுதல் செய்துள்ளனர்.

சமீபத்தில் கர்ப்பிணி மனைவியை ஏற்றிச் செல்ல ஆம்புலன்ஸ் கிடைக்காததால் பிணத்தை தோளில் சுமந்தபடி ஒரு கணவர் நடைப்பயணமாக சென்ற செய்தியும், ஒடிசா மாநிலம், பலசோர் மாவட்டத்தில் ரெயிலில் அடிபட்டு இறந்த 80 வயதான ஒரு மூதாட்டியின் பிரேதத்தை இடுப்பில் உதைத்து, கால்களை மடக்கி, இரு துண்டுகளாக உடைத்து, பின்னர் உடைந்த உடலை சாக்குமூட்டையில் கட்டி, காவடிபோல் தூக்கிச் சென்ற செய்தியும் வெளியாகியுள்ள நிலையில், மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் பயணத்துக்கிடையில் இறந்தப் பெண்ணின் உடலையும், கைக்குழந்தையுடன் அவருடைய குடும்பத்தினரையும் கொட்டும் மழையில், நடுக்காட்டில் இறக்கிவிட்ட சம்பவம் மனிதநேயம் கொண்டவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Similar News