செய்திகள்

உயிர் வாழ ஆசைப்படுகிறேன் - கிட்னி பாதித்த சிறுவன் பிரதமர் மோடிக்கு கடிதம்

Published On 2016-09-06 10:41 IST   |   Update On 2016-09-06 10:41:00 IST
கிட்னி பாதித்த சிறுவன் தான் உயிர் வாழ ஆசைப்படுவதாக பிரதமர் மோடியிடம் உதவி கோரி கடிதம் எழுதி உள்ளான்.
லக்னோ:

உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தைச் சேர்ந்தவன் ராகேஷ். 11 வயதாகும் இவன் அங்குள்ள அரசு பள்ளியில் படித்து வருகிறான்.

ராகேஷின் இரு சிறுநீரங்களும் பழுதடைந்து விட்டன. இதனால் அவனுக்கு வாரத்துக்கு ஒரு தடவை டயாலிசிஸ் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

அவனது தாயும் சில ஆண்டுகளுக்கு முன்பு சிறுநீரக கோளாறால் மரணம் அடைந்தார். தந்தை கூலித் தொழிலாளியாக உள்ளார்.

இதனால் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ள ராகேஷ், பிரதமர் மோடியிடம் உதவி கோரி கடிதம் எழுதி உள்ளான். அந்த கடிதத்தில் அவன் எழுதி இருப்பதாவது:-

நான் உத்தரபிரதேச அரசு பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறேன். எனது இரு சிறுநீரங்களும் பழுதடைந்து விட்டன. 5 நாட்களுக்கு ஒரு தடவை நான் எனது கிராமத்தில் இருந்து ஆக்ராவுக்கு சென்று டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வருகிறேன.

எனக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள் நான் நீண்ட நாட்கள் உயிர் வாழ மாட்டேன் என்று கூறி வருகிறார்கள். தற்போதைய சூழ்நிலையில் எனது வாழ்க்கை மரணப் போராட்டமாக மாறி விட்டது.

நான் நீண்ட நாட்கள் உயிர் வாழ ஆசைப்படுகிறேன். பெரிய மனிதனான பிறகு எப்படி இருப்பேன் என்று என்னைப் பார்க்க ஆசைப் படுகிறேன். எனக்கு மருத்துவ உதவி அளிக்க நீங்கள் உதவி செய்தால் மிகவும் நன்றி உடையவனாக இருப்பேன்.

என்னைக் காப்பாற்றுவதற்காக என் தந்தை எங்கள் பரம்பரைக்குரிய அனைத்து விவசாய நிலங்களையும் விற்பனை செய்து விட்டார். ஆனால் எனது உடல்நிலையில் இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லை.

நீங்கள் (மோடி) மிகவும் அன்பானவர் என்று எனக்குத் தெரியும். குழந்தைகளை நீங்கள் மிகவும் நேசிப்பவர் என்பதையும் நான் அறிவேன். எனவே எனக்கு மருத்துவ ரீதியாக உதவ வேண்டும் என்று வேண்டி கேட்டுக் கொள்கிறேன்.

மோடிஜி, தயவு செய்து எனக்கு உதவி செய்யுங்கள். என் தந்தைக்கு நான் ஒரே மகன். நானும் மரணம் அடைந்து விட்டால், வயதான காலத்தில் என் தந்தைக்கு யாரும் உதவி செய்ய மாட்டார்கள்.

இவ்வாறு அந்த கடிதத்தில் ராகேஷ் கூறியுள்ளான்.

Similar News