செய்திகள்

கான்பூர் ரெயில் விபத்து: பலி எண்ணிக்கை 133 ஆக உயர்வு

Published On 2016-11-21 10:33 IST   |   Update On 2016-11-21 11:14:00 IST
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள கான்பூர் அருகே இந்தூர்-பாட்னா எக்ஸ்பிரஸ் ரெயில் தடம்புரண்டு, கவிழ்ந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 133 ஆக உயர்ந்துள்ளது.
லக்னோ:

மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள இந்தூரில் இருந்து உத்தரப்பிரதேசம் மாநிலம் வழியாக பீகார் மாநில தலைநகர் பாட்னா நோக்கி வேகமாக சென்று கொண்டிருந்த இந்தூர்-ராஜேந்திரா நகர் எக்ஸ்பிரஸ் ரெயில், நேற்று அதிகாலை 3.10 மணியளவில் கான்பூர் நகரில் இருந்து சுமார் 100 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள புக்ரயான் என்ற இடத்தில் தண்டவாளத்தைவிட்டு விலகிச்சென்று, தடம்புரண்டது.

இதில், அந்த ரெயிலின் 14 பெட்டிகள் ஒன்றின்மீது மற்றொன்று பயங்கரமாக மோதியதால் பெட்டிகளின் உள்ளே தூங்கி கொண்டிருந்த பயணிகள் பீதியால் அலறித் துடித்தனர். குறிப்பாக, இரண்டு ஏ.சி. பெட்டிகள் உள்பட நான்கு பெட்டிகள் மிகவும் சேதமடைந்து உருக்குலைந்துப் போய் கிடந்தன.

இவ்விபத்து பற்றிய தகவல் அறிந்து, விரைந்துவந்த மீட்புக் குழுவினர், நசுங்கிய ரெயில் பெட்டிகளில் சிக்கி, உயிருக்கு போராடிய பலரை உயிருடன் மீட்டனர்.

நேற்று காலை 8 மணிநிலவரப்படி, ரெயில் பெட்டிகளில் உடல் நசுங்கிய நிலையில் கிடந்த 45-க்கும் அதிகமான பிரேதங்கள் கண்டெடுக்கப்பட்டதாகவும், மேலும் மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் முதல்கட்ட தகவல் வெளியானது.

காயமடைந்த பயணிகள் 150-க்கும் அதிகமானோர் அருகாமையில் உள்ள ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் சிலர் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து உயிரிழந்தனர். நேற்றிரவு நிலவரப்படி இந்தகோர விபத்தில் 120-க்கும் அதிகமானோர் பலியாகி இருந்தனர்.

இன்றுகாலை இந்த பலி எண்ணிக்கை மேலும் அதிகரித்து 133 ஆக உயர்ந்துள்ளது. இவ்விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தாருக்கு பிரதமரின் நிவாரண நிதியில் இருந்து தலா 2 லட்சம் ரூபாயும், ரெயில்வே துறையின் சார்பில் தலா 3.5 லட்சம் ரூபாயும், உத்தரப்பிரதேசம் மாநில அரசின் சார்பில் தலா 5 லட்சம் ரூபாயும், மத்தியப்பிரதேசம் மாநில அரசின் சார்பில் தலா 5 லட்சம் ரூபாயும் என மொத்தம் 15.5 லட்சம் ரூபாய் நிதியுதவியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

படுகாயம் அடைந்தவர்களின் மருத்துவ செலவுக்கு பிரதமரின் நிவாரண நிதியில் இருந்து தலா 50 ஆயிரம் ரூபாயும், ரெயில்வே துறையின் சார்பில் தலா 50 ஆயிரம் ரூபாயும், உத்தரப்பிரதேசம் மாநில அரசின் சார்பில் தலா 50 ஆயிரம் ரூபாயும், மத்தியப்பிரதேசம் மாநில அரசின் சார்பில் தலா 50 ஆயிரம் ரூபாயும் என மொத்தம் 2 லட்சம் ரூபாய் நிவாரண உதவியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Similar News