செய்திகள்
பிரணாப் முகர்ஜியின் பதவி காலம் நிறைவடைவதையொட்டி ஜனாதிபதி வேட்பாளரை தேர்வு செய்ய பா.ஜ.க தீவிரம்
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவி காலம் ஜூலை மாதம் முடிவடைகிறது. இதையொட்டி, அடுத்து நடைபெற இருக்கும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை தேர்ந்தெடுக்க பா.ஜ.கவும், எதிர்க்கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
புதுடெல்லி:
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவி காலம் ஜூலை மாதம் முடிவடைகிறது. இதையொட்டி, அடுத்து நடைபெற இருக்கும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை தேர்ந்தெடுக்க பா.ஜனதாவும், எதிர்க்கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
ஜனாதிபதியாக பிரணாப் முகர்ஜி பதவி ஏற்று வருகிற ஜூலை மாதம் 25-ந்தேதியுடன் 5 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதையடுத்து புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடுவதற்கான வேட்பாளர்களை பரிசீலிக்கும் பணிகள் இப்போதே தொடங்கி விட்டன.
பா.ஜ.க.வில் பாராளுமன்ற சபாநாயகர் சுமித்ரா மகாஜன், மத்திய மந்திரி வெங்கையா நாயுடு மற்றும் ஜார்கண்ட் மாநில கவர்னர் திரவுபதி மர்மு போன்ற மூத்த தலைவர்களின் பெயர்கள் அடிபடுகின்றன. இந்த மூவரில் ஒருவரை பிரதமர் மோடியும், பா.ஜனதா தலைவர் அமித்ஷாவும் கலந்து பேசி முடிவு செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதான எதிர்க்கட்சியான காங்கிரசும், பா.ஜ.க.விற்கு எதிரான கட்சிகளை ஒன்று திரட்டி வலுவான வேட்பாளரை நிறுத்த முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமாருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும், இடது சாரி கட்சிகளின் முக்கிய தலைவர்களுடன் இது தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டார்.
இதேபோல் மேற்கு வங்காள முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜியை இந்த வாரத்தில் சோனியா காந்தி சந்தித்து பேசுகிறார். எதிர்க்கட்சிகள் சார்பில் மேற்கு வங்காள முன்னாள் கவர்னர் கோபால கிருஷ்ண காந்தி நிறுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளர் நிறுத்தப்பட்டால், தேசிய ஜனநாயக கூட்டணி- காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் என இரு முனை போட்டி மட்டுமே நிலவும்.
ஜனாதிபதி தேர்தலை பொறுத்தவரை ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.