செய்திகள்

இரட்டை இலைக்கு லஞ்சம்: டி.டி.வி.தினகரனின் காவல் 29-ந்தேதி வரை நீட்டிப்பு

Published On 2017-05-15 14:18 IST   |   Update On 2017-05-15 14:18:00 IST
இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக லஞ்சம் கொடுக்க முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் கைதான டி.டி.வி.தினகரனின் நீதிமன்ற காவலை மேலும் 14 நாட்களுக்கு நீட்டித்து நீதிபதி பூனம் சவுத்ரி உத்தரவிட்டார்.
புதுடெல்லி:

இரட்டை இலை சின்னம் பெற தேர்தல் கமிஷனுக்கு ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாக பெங்களூரைச் சேர்ந்த இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டார்.



அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அ.தி.மு.க. அம்மா அணி துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனை டெல்லி போலீசார் கைது செய்தனர்.

இதேபோல ஹவாலா தரகர் நரேஷ், மல்லிகார்ஜுனா ஆகியோரும் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டனர்.

கைதான டி.டி.வி.தினகரனை டெல்லி போலீசார் 5 நாள் காவலில் எடுத்து விசாரித்தனர். அவரை சென்னை கொண்டு வந்து பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்றனர்.

போலீஸ் விசாரணை முடிவடைந்ததை தொடர்ந்து கடந்த 1-ந்தேதி டெல்லி தனிக்கோர்ட்டில் தினகரன் ஆஜர்படுத்தப்பட்டார். 15-ந்தேதி வரை (இன்று) நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து அவர் டெல்லி திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

தினகரனின் நீதிமன்ற காவல் இன்று முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து அவர் வீடியோ கான்பரன்ஸ் மூலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். தினகரனின் நீதிமன்ற காவலை மேலும் 14 நாட்களுக்கு நீட்டித்து நீதிபதி பூனம் சவுத்ரி உத்தரவிட்டார்.

இதுபோல சுகேஷ் சந்திரசேகர், தினகரனின் நண்பர் மல்லிகார்ஜுனா, நரேஷ் ஆகியோரது நீதிமன்ற காவலும் 29-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்ற இந்த வழக்கில் தினகரன், சுகேஷ் சந்திரசேகரின் குரல் பதிவுகளை சி.பி.ஐ. தடயவியல் மையத்துக்கு அனுப்பி ஆய்வு செய்ய அனுமதிக்க வேண்டும் என்று டெல்லி கோர்ட்டில் குற்றப்பிரிவு போலீசார் கடந்த வியாழக்கிழமை மனுதாக்கல் செய்தனர்.

இந்த மனுவுக்கு இன்றுக்குள் பதில் அளிக்குமாறு கோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது. குரல் பதிவை ஆய்வு செய்ய தினகரன், சுகேஷ் சந்திரசேகர் எதிர்ப்பு தெரிவித்தனர். இது தொடர்பாக அவர்களது வக்கீல்கள் எதிர்ப்பு தெரிவித்து பதில் மனு தாக்கல் செய்தனர்.

குரல் பதிவு ஆய்வு செய்வது குறித்த மனுக்களின் விசாரணை 18-ந்தேதி நடைபெறும் என்று நீதிபதி அறிவித்தார்.


Similar News