செய்திகள்

ரான்சம்வேர் வைரஸ் தாக்குதல்: கேரளாவில் பஞ்சாயத்து அலுவலகத்தின் 4 கம்ப்யூட்டர்கள் பாதிப்பு

Published On 2017-05-15 18:23 IST   |   Update On 2017-05-15 18:23:00 IST
கேரளாவில் உள்ள ஒரு பஞ்சாயத்து அலுவலகத்தின் நான்கு கம்ப்யூட்டர்கள் ரான்சம்வேர் வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டதையடுத்து, அதனை சரிசெய்யும் முயற்சியில் வல்லுநர்கள் ஈடுபட்டுள்ளனர்.
திருவனந்தபுரம்:

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு முகமை (என்.எஸ்.ஏ.), உருவாக்கிய, இணையவழி தாக்குதல் ‘டூல்’களை (கருவிகளை) கொண்டு, உலகின் சுமார் 150 நாடுகளில் உள்ள நிறுவனங்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் கணினிகளில் ‘ரான்சம்வேர்’ வைரஸ் மூலம் இணைய தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவிலும் இதன் பாதிப்பு அதிகம் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் கேரளாவில் இரு பஞ்சாயத்து அலுவலகங்களில் உள்ள கம்ப்யூட்டர்களை ரான்சம்வேர் வைரஸ் தாக்கி உள்ளது என செய்தி வெளியாகி உள்ளது.

கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் தரியோடு பஞ்சாயத்து அலுவலகத்தை பணியாளர்கள் திறந்து, கம்ப்யூட்டர்களை ஆன் செய்தனர். அப்போது அவர்களுடைய 4 கம்ப்யூட்டர்களும் ஹேக்கிங் செய்யப்பட்டிருந்தது தெரியவந்து உள்ளது.

வைரஸ் தாக்குதலில் இருந்து மீண்டு, கணினியில் கோப்புகளை திறப்பதற்கு 300 டாலர் (ரூ.19 ஆயிரத்து மேல்) பிட்காயின்களை செலுத்துமாறு கணினி திரையில் தோன்றியதாகவும், இதுதொடர்பாக மாவட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்கப்பட்டு உள்ளது என்று பஞ்சாயத்து அலுவலக அதிகாரி கூறியுள்ளார்.

இதுபோன்று பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள ஒரு பஞ்சாயத்து அலுவலகத்திலும் கம்ப்யூட்டர்கள் ஹேக்கிங் செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மாநிலத்தில் பேப்பர் பைல்களை குறைக்க முக்கிய ஆவணங்கள் கணினிகளில் வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்து உள்ளது. ஹேக்கிங்கால் பாதிக்கப்பட்ட கம்ப்யூட்டர்களில் உள்ள பைல்களை மீட்கும் பணியில் ஐ.டி. நிபுணர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Similar News