செய்திகள்

ரூபாய் நோட்டு வாபஸ்: நான் மந்திரியாக இருந்தால் பதவி விலகி இருப்பேன் - ப.சிதம்பரம் பேட்டி

Published On 2017-10-29 12:34 IST   |   Update On 2017-10-29 12:34:00 IST
ரூபாய் நோட்டு வாபஸ் தொடர்பான விவகாரத்தில் நான் மந்திரியாக இருந்தால் பதவி விலகி இருப்பேன் என்று ப.சிதம்பரம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

புதுடெல்லி:

முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் டெல்லியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

கடந்த 2004 முதல் 2009 வரை இந்திய பொருளாதாரம் வளர்ச்சி விகிதம் 8.5 சதவீதமாக இருந்தது. இதுதான் இந்திய பொருளாதாரம் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு உச்சத்தில் இருந்த காலகட்டமாகும்.

ஆனால் 2014-ல் இந்திய பொருளாதாரம் சரிவை சந்தித்தது. பணமதிப்பு இழப்பு நடவடிக்கைக்கு பிறகு பொருளாதாரம் கடும் வீழ்ச்சி அடைந்துவிட்டது. மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லியோ இந்திய பொருளாதாரம் வலுவாக இருப்பதாக கூறிவருகிறார்.


பொருளாதாரம் வலுவாக இருந்தால் பொதுத்துறை வங்கிகளில் ரூ.2.11 லட்சம் கோடி கூடுதல் முதலீடு செய்யப்போவதாக அறிவித்தது ஏன்? ரூ.6 லட்சம் கோடியில் சாலை அமைக்கும் திட்டத்தை அறிவித்தது ஏன்?

கருப்பு பணத்தை ஒழிக்க போவதாக கூறி ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டது. ஆனால் அவர்களால் கருப்பு பணம் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை.

அதே நேரத்தில் பண புழக்கம் முடங்கி சிறு, குறு, நிறுவனங்கள் நலி வடைந்தன. இதனால் பல லட்சம் பேரின் வேலை வாய்ப்பு பறிபோனது. புதிய வேலைவாய்ப்பு உருவாகவில்லை. பெரிய தொழில் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு ஏற்படாது, சிறு, குறு நிறுவனங்கள் அதிகரித்தால்தான் அதிகமான வேலை வாய்ப்புகள் உருவாகும்.

புல்லட்ரெயில் திட்டத்துக்கு தேவையற்ற வகையில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. அதற்கு செலவிடும் ரூ.1 லட்சம் கோடியை கல்வி, சுகாதாரம் மற்றும் வேலை வாய்ப்புகளை உருவாக்க பயன்படுத்த வேண்டும்.

மத்திய அரசின் அனைத்து முடிவுகளும் சரியானவை அல்ல. ரூபாய் நோட்டு வாபஸ், ஜி.எஸ்.டி. ஆகியவை இந்த அரசு மேற்கொண்ட மாபெரும் தவறான முடிவுகளாகும்.


தனியார் முதலீடு குறைந்து இருப்பது, ஏற்றுமதி குறைவாக இருப்பது, நுகர்வு குறைவாக இருப்பது என்று பொருளாதார சரிவுக்கு பல காரணங்கள் இருந்தாலும், பணமதிப்பு நீக்கமும், ஜி.எஸ்.டி. சட்டத்தை அவசர அவசரமாக நிறை வேற்றியதுதான் மிக முக்கிய காரணமாகும்.

ஜி.எஸ்.டி. மிகச்சிறந்த திட்டம். ஆனால் இந்த அரசு அதனை மோசமாக அமல்படுத்திவிட்டது.

நான் நிதிமந்திரியாக இருந்த போது எனது பிரதமர் ரூபாய் நோட்டு நடவடிக்கையை மேற் கொள்ள உத்தரவிட்டு இருந்தால் நிச்சயமாக எதிர்ப்பு தெரிவித்து இருப்பேன். அதை மீறி அவர் கட்டாயப்படுத்தி இருந்தால் எனது பதவியை ராஜினாமா செய்து இருப்பேன்.

இவ்வாறு ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

Similar News