வணிக வாகனமாக மாற்றம்: விவசாய டிராக்டர்களுக்கு வரி வருடத்துக்கு ரூ.650 கூட்ட வேண்டும்
புதுடெல்லி:
மத்திய அரசு ஏற்கனவே ஜி.எஸ்.டி. வரியை அமல்படுத்தியுள்ளது. இதில் விவசாய பொருள்களுக்கு விதி விலக்கு அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் விவசாயத்துக்கு பயன்படுத்தும் டிராக்டர்களுக்கு சாலை வரி விதிக்க முடிவு செய்துள்ளது. டிராக்டர்கள் விவசாயத்துக்கு பயன்படுத்தப்படும் வாகனமாக கருதி இதுவரை அதற்கு எந்த வரியும் விதிக்கப்படவில்லை. பதிவு கட்டணம் மட்டும் ரூ.50 செலுத்த வேண்டும்.
ஆனால் டிராக்டர்கள் வணிக ரீதியாக பயன்படுத்தப்படுவதால் அதற்கு சாலை வரி விதிப்பது குறித்து மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.
இதற்காக டிராக்டர் விவசாய வாகன பிரிவில் இருந்து வணிக வாகனங்களாக மாற்றப்படுகிறது. வணிக வாகனங்களுக்கு இணையாக டிராக்டருக்கும் வரி விதிக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது. அதன்படி ஆண்டுக்கு ரூ.650 சாலை வரி விதிக்கப்படுகிறது. விரைவில் இதற்கான உத்தரவு வருகிறது.
தமிழ்நாடு முழுவதும் 2 லட்சம் டிராக்டர்கள் வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இதில் 99 சதவீத டிராக்டர்கள் விவசாய வாகனம் என்ற பெயரில் பதிவு செய்யப்பட்டு வரி விலக்கு பெற்றுள்ளது. சில டிராக்டர்கள் மட்டும் வணிக வாகனமாக பயன்படுத்தப்பட்டுள்ளது.
ஆனால் பெரும்பாலானவர்கள் விவசாய பயன்பாடு என்ற பெயரில் டிராக்டர்களை வணிக ரீதியாக மணல் மற்றும் ஜல்லி கற்கள் ஏற்றிச் செல்லவும் விவசாய பயன்பாடு அல்லாத சரக்கு போக்குவரத்துக்கும் பயன்படுத்துகிறார்கள். எனவே தான் சாலை போக்குவரத்து அமைச்சகம் இந்த முடிவு எடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதுடன் அரசின் வரிச்சலுகையை தவறாக பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கடந்த செப்டம்பர் மாதம் 27-ந்தேதி மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் செய்தது. விவசாய டிராக்டர்களை போக்குவரத்து அல்லாத வாகனம் என்ற பிரிவில் இருந்து நீக்கி வணிக வாகனம் என மாற்றியது.
எனவே இந்த சட்டதிருத்தம் அமலுக்கு வந்தால் இனி டிராக்டர்களை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் வணிக வாகனம் என்ற பிரிவில் தான் பதிவு செய்ய முடியும்.
மத்திய அரசின் இந்த உத்தரவுக்கு டிராக்டர் உரிமையாளர்களும், விற்பனையாளர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஏற்கனவே டிராக்டர் பயன்பாடு குறைந்து வரும் நிலையில் மத்திய அரசின் முடிவு வெகுவாக பாதிக்கும் என்று கூறியுள்ளனர்.