செய்திகள்

செலவை குறைக்க அனைவருக்கும் ஒரே ஊசி: உ.பி.யில் 46 பேருக்கு எச்.ஐ.வி நோய்த்தொற்று

Published On 2018-02-06 15:38 IST   |   Update On 2018-02-06 15:52:00 IST
உத்தரப்பிரதேசம் மாநிலம் உன்னாவோ மாவட்டத்தில் 556 பேருக்கு நடத்தப்பட்ட உடல் பரிசோதனையில் 46 பேருக்கு உயிர்க்கொல்லி நோயான எச்.ஐ.வி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
லக்னோ:

உத்தரப்பிரதேசம் மாநிலம் உன்னாவோ மாவட்டத்தில் அதிகளவில் எச்.ஐ.வி பாதிப்பு புகார்கள் எழுந்த நிலையில், அம்மாநில  சுகாதாரத்துறை சமீபத்தில் இருநபர்கள் கொண்ட கமிட்டியை பிரேம்கஞ்ச், சாகிம்ர்புர் ஆகிய பகுதிகளில் ஆய்வு செய்ய அனுப்பியது.

அந்த கமிட்டி 566 பேரை பரிசோதனை செய்ததில் தற்போது வரை 46 பேர் எச்.ஐ.வி நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மிக குறுகிய காலத்தில் இத்தனை பேர் எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டதற்கான காரணமும் வெளியாகியுள்ளது.

அங்குள்ள கிராமம் ஒன்றில் வசிக்கும் ராஜேந்திர குமார் என்பவர் சிகிச்சைக்காக வருபவர்களுக்கு ஒரே ஊசியை பயன்படுத்தி ஊசி போட்டுள்ளார். செலவை குறைக்கும் விதமாக அவர் இப்படி செய்துள்ளதாக கூறப்படுகிறது. பிடிபட்டுள்ள ராஜேந்திர குமார் முறையாக மருத்துவம் படித்தவர் இல்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதனையடுத்து, அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பாதிக்கப்பட்ட அனைத்து நோயாளிகளும் கான்பூரில் உயர்சிகிச்சை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக மாநில சுகாதார துறை மந்திரி தெரிவித்துள்ளார்.

Similar News