செய்திகள்

நிபா வைரசால் உயிரிழந்த செவிலியர் லினி தனது கணவருக்கு எழுதிய இறுதி மடல்

Published On 2018-05-22 17:24 IST   |   Update On 2018-05-22 17:24:00 IST
கேரளாவில் நிபா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளித்து உயிரிழந்த செவிலியர் தனது கணவருக்கு எழுதிய கடைசி கடிதம் பரவி வைரலாக வருகிறது. #Lini #KeralaNurse #Nipahvirus
திருவனந்தபுரம்:

கேரளாவில் வேகமாக பரவி வரும் 'நிபா' வைரஸ் காய்ச்சலுக்கு 10 பேர் உயிரிழந்தனர். அங்கு பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட மத்தியக்குழு விரைந்தது. நிபா வைரஸ் அறிகுறியுடன் 10-க்கும் மேற்பட்டோர் கோழிக்கோடு மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நோய் தாக்கியவர்களுக்கு மருத்துவ உதவிகளை மேற்கொண்டு வந்த லினி என்ற நர்சும் நேற்று காலையில் மரணமடைந்தார். அவருடைய சடலத்தை உறவினர்கள் யாரும் பார்க்கவில்லை. அவருக்கு இறுதிச்சடங்கு யாரும் செய்யவில்லை.

இரண்டு பிஞ்சுக் குழந்தைகளை விட்டுப் பிரிந்த லினி, பாதிக்கப்பட்டவர்களுக்கு மிகவும் கனிவான முறையில் சிகிச்சையளித்து வந்து உள்ளார். வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரவும், பகலுமாக கண்விழித்து சிகிச்சையை அளித்து வந்து உள்ளார். அவருடைய உயிரிழப்பு பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

வைரஸ் பரவல் காரணமாக உயிரிழந்தவர்களின் சடலத்தை ஒப்படைக்கவும் அச்சம் நிலவுகிறது, மாநில சுகாதாரத்துறையின் மூலம் தகனம் செய்யப்படுகிறது. கேரளாவில் முதன் முதலில் நிபா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து மாநிலம் முழுவதும் கடும் உஷார் நிலை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. கடுமையான காய்ச்சல், தலைவலி, மயக்கம், சுவாசக்கோளாறு போன்றவைதான் இந்த நோய்க்கான அறிகுறி ஆகும். இந்த வைரஸ் மூளையை தாக்குவதால், மூளைக்காய்ச்சல் ஏற்பட்டு ஒரு சில நாட்களிலேயே மரணம் ஏற்படுகிறது. இந்த நோய்க்கு இன்னும் தடுப்பூசி எதுவும் கண்டறியப்படவில்லை. நோய் தாக்கியவருக்கு அடிப்படை சிகிச்சை மட்டுமே அளிக்கப்படுகிறது.

கோழிக்கோடு பெரம்பராவில் உள்ள மருத்துவமனையில் பணியாற்றிய 3 செவிலியர்களும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர் என தகவல்கள் வெளியாகி உள்ளது. பாதிக்கப்பட்ட செவிலியர்கள் நிபா வைரசால் பாதித்தவர்களுக்கு முதல்கட்ட சிகிச்சையை அளித்தார்கள் என தெரியவந்து உள்ளது. பெரம்பரா தாலுகா மருத்துவமனையில் இருந்து கோழிக்கோடு எம்சிஎச்க்கு அனுப்பப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு தலைவலி மற்றும் காய்ச்சல் ஏற்பட்டு உள்ளது என தெரியவந்து உள்ளது, அவர்களுக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு உள்ளதா என்பது உறுதிசெய்யப்படவில்லை.

கேரளாவில் நிபா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளித்து உயிரிழந்த செவிலி லினி கடைசிநேர உருக்கமான கடிதம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. செவிலி லினியின் கணவர் ப்க்ரைனில் பணிபுரிந்து வருகிறார். கடைசி நேரத்தில் தன்னுடைய கணவரை சந்திக்க முடியாது என்ற நிலையில் இந்த கடிதத்தை லினி எழுதி உள்ளார்.

அதில், 'சாஜி சேட்டா, நான் எனது முடிவை நெருங்கிக்கொண்டிருக்கிறேன். இந்த நிலையில் உங்களைப் பார்க்க முடியும் என்ற நம்பிக்கைகூட எனக்கு கிடையாது. என்னை மன்னிக்கவும். நமது குழந்தைகளை பத்திரமாகப் பார்த்து கொள்ளுங்கள்.  விவரமறியா அந்த குழந்தைகளை உங்களுடன் வளைகுடா நாட்டுக்கே கூட்டி சென்றுவிடவும். நமது தந்தையைப் போல் அவர்களும் தனியாக இருக்கக்கூடாது' என லினி தன்னுடைய கடிதத்தை எழுதி உள்ளார்.

லினியின் இரண்டு பிஞ்சுக் குழந்தைகள் தன்னுடைய தாயுக்கு என்ன நேரிட்டது என தெரியாமலே விளையாடுவது அனைவரது நெஞ்சையும் உடைய செய்கிறது. நிபா வைரசால் உயிரிழந்த லினியின் மரணத்திற்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் வருத்தம் தெரிவித்துள்ளார். #Lini #KeralaNurse #Nipahvirus
Tags:    

Similar News