செய்திகள்
சுய உதவிக்குழுக்களை சேர்ந்தவர்களுக்கு அரசு துறைகளில் முன்னுரிமை - மெகபூபா முப்தி
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பல்வேறு துறைகள் தங்களுக்கு தேவையான பொருட்களை கொள்முதல் செய்யும் போது, 30 சதவிகிதம் சுய உதவிக்குழுக்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என முதல்வர் மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார். #MehboobaMufti #SelfHelpGroups
ஸ்ரீநகர் :
காஷ்மீர் மாநிலத்தில் திறமை வாய்ந்த பட்டதாரிகள் மூலம் அவர்களின் திறமைக்கு ஏற்ப அம்மாநிலத்தின் பொறியியல், கட்டுமானம் மற்றும் உள் கட்டமைப்புகளை தரம் உயர்த்தும் பணிகளுக்கு தேவையான பொருட்களை சுயமாக தயாரித்துக்கொடுப்பதற்காக சுய உதவிக்குழுக்கள் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், காஷ்மீர் மாநில முதல்வர் மெகபூபா முப்தி தலைமையில் அம்மாநிலத்தில் இயங்கி வரும் பல்வேறு துறைகளை சேர்ந்த சுய உதவிக்குழுக்களை சீரமைப்பது, தேவைக்கு ஏற்ப அவர்களை துறைவாரியாக ஒருங்கிணைப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்த ஆலோசனையின் போது சுய உதவிக்குழுக்களை மேம்படுத்த தேவையான திருத்தங்கள் மற்றும் அறிவிப்புகள் தொடர்பான கருத்துக்களை அவர் கேட்டறிந்தார். ஆலோசனைக்கு பின்னர் முதல்வர் மெகபூபா முப்தி சுய உதவி குழுக்களை சேர்ந்தவர்களுக்கு அம்மாநில அரசுத்துறைகளில் 30 சதவிகிதம் முன்னுரிமை அளிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலும், இதுவரை சுய உதவிக்குழுக்களுக்கு வழங்கப்பட்டு வந்த நிதியுதவியை 60 லட்சத்தில் இருந்து 1 கோடியாக உயர்த்தி அறிவித்துள்ளார். இதை செயல்படுத்த தேவைப்படும் நிதி குறித்த திட்ட வரைவை ஜம்மு காஷ்மீர் வங்கி அடுத்த 10 நாட்களுக்குள் சமர்பிக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார். #MehboobaMufti #SelfHelpGroups