செய்திகள்

உ.பி. துப்பாக்கி சுடுதல் வீராங்கனைக்கு ரூ.4.5 லட்சம் - யோகி ஆதித்யநாத் அறிவிப்பு

Published On 2018-06-09 14:41 IST   |   Update On 2018-06-09 14:41:00 IST
உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கேற்க நிதி உதவி கேட்டு பிரதமர் மோடி, முதல்மந்திரி யோகி ஆதித்யநாத்துக்கு கடிதம் எழுதிய இளம் வீராங்கனைக்கு ரூ.4.5 லட்சம் நிதி அறிவிக்கப்பட்டுள்ளது. #ISSFJuniorWorldCup #FundForIndianPlayer
மீரட்:

சர்வதேச துப்பாக்கி சுடுதல் கூட்டமைப்பு (ஐ.எஸ்.எஸ்.எப்) சார்பில் ஜெர்மனியின் சுகல் நகரில் வரும் 22-ம் தேதி ஜூனியர் உலகக் கோப்பை போட்டி தொடங்க உள்ளது. இதில் இந்தியா சார்பில் பங்கேற்பதற்கு, உத்தர பிரதேச மாநிலம் மீரட்டைச் சேர்ந்த பிரியா சிங் (வயது 19) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஆனால், உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்று இந்தியாவிற்கு பெருமை சேர்க்க காத்திருக்கும் பிரியா சிங்கின் குடும்பம் ஏழ்மை நிலையில் இருப்பதால், அவரால் ஜெர்மனி சென்று தங்கியிருந்து போட்டியில் பங்கேற்க முடியாத நிலை உள்ளது. அங்கு செல்வதற்கு லட்சக் கணக்கில் செலவு ஆகும் என்பதால் அவரது குடும்பத்தினர் என்ன செய்வது என்று தெரியாமல் தவிப்பில் உள்ளனர்.

எனவே, ஜெர்மனி சென்று திரும்புவதற்கான பயணச் செலவு மற்றும் அங்கு தங்குவதற்கு தேவையான நிதி உதவி கேட்டு பிரதமர் நரேந்திர மோடிக்கு பிரியா சிங் கடிதம் அனுப்பி இருந்தார்.

தாம் விளையாட்டு போட்டியில் பங்கேற்க மிகவும் ஆர்வமாக உள்ளதாகவும், என் தந்தை கூலித்தொழிலாளி என்பதால் அங்கு சென்று போட்டியில் பங்கேற்பதற்கான பண உதவியை கேட்டு முதல்மந்திரி மற்றும் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இந்த கடிதம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய முதல்மந்திரி யோகி ஆதித்யநாத், துப்பாக்கிச்சூடு வீராங்கனை பிரியா சிங் ஜெர்மனி சென்று போட்டியில் பங்கேற்பதற்காக உ.பி அரசு சார்பில் 4 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளதாகவும், அவரது பயணத்துக்கான செலவில் ஒரு பகுதியினை மாவட்ட நிர்வாகம் செய்துதரும் எனவும் கூறியுள்ளார்.


பிரியா சிங்கின் சகோதரர்

முதல்மந்திரி யோகி ஆதித்யநாத்தின் இந்த அறிவிப்பால் பிரியா சிங் மற்றும் அவரது குடும்பத்தினர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து பேசிய பிரியா சிங்கின் சகோதரர் அனிகெட் கவுதம், ‘நாங்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் இருக்கிறோம். ஜெர்மனிக்கு எனது சகோதரியை அனுப்புவதற்கான பண வசதி எங்களிடம் இல்லை. நாங்கள் முதல்மந்திரி யோகி ஆதித்யநாத்துக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்’ என தெரிவித்துள்ளார். #ISSFJuniorWorldCup #FundForIndianPlayer #YogiAdityanath
Tags:    

Similar News