செய்திகள்
தென்மேற்கு பருவமழை

கேரளாவில் நாளை முதல் பலத்த மழை பெய்யும் - 4 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

Published On 2019-07-04 10:47 IST   |   Update On 2019-07-04 10:47:00 IST
கேரளாவில் நாளை முதல் பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளதால் 4 மாவட்டங்களுக்கு இன்று மழை தொடர்பான மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்:

கேரளாவில் ஆண்டுதோறும் தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் முதல் வாரம் தொடங்கும்.

இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தாமதமாக ஜூன் 8-ந்தேதி தொடங்கியது. அதன் பிறகு மாநிலம் முழுவதும் பரவலாக பெய்த மழை, வாயு புயல் உருவானதும், தீவிரம் குறைந்து சாரல் மழையாக மாறியது.

கேரளாவில் கண்ணாமூச்சி காட்டிய தென்மேற்கு பருவமழையால் மாநில அணைகளின் நீர் இருப்பு குறைந்தது. இதனால் மாநில மின் உற்பத்தியும் குறைந்தது. மின்சாரத்திற்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலையும் உருவானது.



இந்த நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் நாளை முதல் கேரளாவில் மீண்டும் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடையும் என்று கூறி உள்ளது.

மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மிதமானது முதல் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், மாநில அரசு உரிய முன் எச்சரிக்கைகளை மேற்கொள்ளவும் வானிலை மையம் அறிவுறுத்தி உள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மைய அறிக்கையை தொடர்ந்து மாநில அரசு மழை முன் எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இதில் பத்தினம் திட்டா, கோட்டயம், இடுக்கி, கண்ணூர் மாவட்டங்களுக்கு இன்று மழை தொடர்பான மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இதுபோல எர்ணாகுளம், இடுக்கி, கோழிக்கோடு, கண்ணூர் ஆகிய 4 மாவட்டங்களுக்கு நாளை மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் போதிய முன்னேற்பாடுகளை மேற்கொள்ளவும், மாநில அரசு அறிவுறுத்தி உள்ளது.

Similar News