செய்திகள்
கைது செய்யப்பட்ட பறவை கடத்தல்காரர்கள்

தீபாவளி பண்டிகைக்காக பலியிட இருந்த ரூ.1 கோடி மதிப்புள்ள அரிய வகை ஆந்தைகள் மீட்பு

Published On 2019-10-23 17:46 IST   |   Update On 2019-10-23 17:46:00 IST
உத்தர பிரதேசத்தில் தீபாவளி அன்றிரவில் பலியிடுவதற்காக கடத்தப்பட்ட 5 அரிய வகை ஆந்தைகளை போலீசார் மீட்டனர்.
காசியாபாத்: 

வாழ்க்கையின் இருளை நீக்கி, ஒளியைக் கொடுக்கும் பண்டிகையாக தீபாவளி இந்தியா முழுவதும் கோலாகலமாக  கொண்டாடப்படுகிறது. தீபாவளி இரவில், மக்கள் லட்சுமி தெய்வத்தை வணங்குகிறார்கள். இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வருகிற  27-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. 

இந்தியாவின் வட மாநிலங்களில் தீபாவளி இரவன்று ஒரு சில மந்திரவாதிகள் ஆந்தைகளை பலியிடுவதை வழக்கமாக  கொண்டுள்ளனர். ஆந்தைகளை பலியிடுவதால் துரதிர்ஷ்டம் விலகி அதிர்ஷ்டம் வருவதாக நம்புகின்றனர். 

இந்நிலையில், உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத் நகர் அருகிலுள்ள வைசாலி பகுதியில் அரிய வகை ஆந்தைகளை  மந்திரவாதிகளுக்கு விற்க முயன்ற இருவரை போலீசார் நேற்று கைது செய்தனர். 

இது குறித்து போலீசார் கூறுகையில், ‘வைசாலி பகுதியில் அரிய வகை பறவைகள் கடத்தப்படுவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து  அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, சுமித், பிரதீப் என்ற இருவர் மோட்டார் சைக்கிளில் வந்தனர்.  

அவர்களை விசாரித்ததில், ஆந்தைகளை கடத்தி மந்திரவாதிகளிடம் விற்பனை செய்ய முற்பட்டது தெரிய வந்தது. ஆந்தைகளை  கூடையில் மறைத்து வைத்து கொண்டு வந்தனர். 

அவர்களிடமிருந்து 5 அரிய வகை ஆந்தைகள் பறிமுதல் செய்யப்பட்டு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டன. கடத்தலில் ஈடுபட்ட  இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 

தீபாவளி அன்று ஆந்தைகளை பலியிடுவதால் நன்மை நடக்கும் என்ற தவறான சிந்தனையை மந்திரவாதிகள் சமூகத்தில் பரப்பி  வருகின்றனர். அப்பகுதியில் உள்ள மந்திரவாதிகளை கைது செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது, பறிமுதல் செய்யப்பட்ட  பறவைகளின் மதிப்பு சுமார் ஒரு கோடி ரூபாய்’ என தெரிவித்தனர்.

Similar News