செய்திகள்
கொரோனா வைரஸ்

இந்தியாவில் 21.5 சதவீதம் பேருக்கு கொரோனா தாக்கியதற்கு ஆதாரம்- ஆய்வு முடிவில் அம்பலம்

Published On 2021-02-05 07:34 IST   |   Update On 2021-02-05 07:49:00 IST
18 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினர் 28 ஆயிரத்து 589 பேரிடம் செரோ சர்வே நடத்தப்பட்டது. அதில் 21.4 சதவீதம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதற்கான ஆதாரங்கள் தெரிய வந்துள்ளன.
புதுடெல்லி:


இந்தியாவில் 21.5 சதவீதம் பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்ததற்கான ஆதாரம், செரோ சர்வேயில் தெரியவந்துள்ளது.

ஒருவருக்கு கடந்த காலத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு இருந்ததா என்பதை கண்டறிவதற்கு கோவிட் சுவாச் எலிசா உபகரணம் மூலம் ரத்த பரிசோதனை செய்யப்படுகிறது. இது செரோ சர்வே என அழைக்கப்படுகிறது. அவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு அதில் இருந்து மீண்டு வந்திருந்தால், அவர்களுடைய உடலில் உருவாகியுள்ள ஆன்டிபாடியை (நோய் எதிர்ப்பு பொருள்) வைத்து கண்டறிந்து விட முடியும். இப்படி ஏற்கனவே இந்தியாவில் 2 முறை செரோ சர்வேக்கள் நடத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில், 3-வது செரோ சர்வே 10 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினர் மத்தியில் கடந்த டிசம்பர் 7-ந்தேதி முதல் ஜனவரி 8-ந்தேதி வரையில் நடத்தப்பட்டுள்ளது. குறிப்பாக 21 மாநிலங்களில் 70 மாவட்டங்களில், 700 கிராமங்கள் அல்லது வார்டுகளில் இந்த செரோ பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.

அதன் முடிவுகளை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் தலைவர் டாக்டர் பலராம் பார்கவா, டெல்லியில் நேற்று வெளியிட்டார். அது வருமாறு:-

* 18 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினர் 28 ஆயிரத்து 589 பேரிடம் செரோ சர்வே நடத்தப்பட்டது. அதில் 21.4 சதவீதம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதற்கான ஆதாரங்கள் தெரிய வந்துள்ளன.

* 10 முதல் 17 வயதுக்குட்பட்டோரில் 25.3 சதவீதம் பேர் கெரோனா தொற்றுக்கு ஆளாகி இருந்திருக்கிறார்கள்.

* நகர்ப்புற குடிசைப்பகுதிகளில், 31.7 சதவீதத்தினருக்கும், குடிசைகளற்ற பகுதிகளில் 26.7 சதவீதமும் கொரோனா வைரஸ் தாக்கி இருந்தது தெரிய வந்துள்ளது. அதே நேரத்தில் கிராமப்புறங்களில் 23.4 சதவீதம்பேருக்குத்தான் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது.

* 60 வயதுக்கு மேற்பட்டோரில் 23.4 சதவீதம் பேர் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகி உள்ளனர்.

* 7,171 சுகாதார பணியாளர்களின் ரத்த மாதிரியும் இந்த செரோ சர்வேயின்போது சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அதில் அவர்களில் 25.7 சதவீதம் பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கி இருந்தது தெரியவந்தது.

இவ்வாறு அவர் புள்ளிவிவரங்களை வெளியிட்டார்.

நமது நாட்டின் மக்கள் தொகை சுமார் 130 கோடி ஆகும். 21.5 சதவீதம் பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்திருப்பது தெரிய வந்துள்ள நிலையில், மொத்தம் சுமார் 27 கோடி பேருக்கு கொரோனா வைரஸ் வந்து, மீண்டிருக்கிறார்கள் என்று எடுத்துக்கொள்ளலாம்.

அதே நேரத்தில் தற்போது நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு விகிதம், 5.42 சதவீதமாக உள்ளது. பாதிப்பின் அளவு குறைந்து வருகிறது. கடந்த வாரத்தின் வாராந்தரி பாதிப்பு விகிதம் 1.82 சதவீதமாக இருந்தது என்ற தகவலை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

அத்துடன், கடந்த 3 வாரங்களில் 47 மாவட்டங்களில் புதிதாக ஒருவருக்கு கூட கொரோனா தாக்குதல் இல்லை. அதுபோலவே இந்த கால கட்டத்தில் 251 மாவட்டங்களில் ஒருவர் கூட கொரோனாவால் இறக்கவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News