செய்திகள்
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் (கோப்புப்படம்)

டெல்லி நகருக்குள் விவசாயிகள் நுழைவதை தடுக்க 5 அடுக்கு பாதுகாப்பு

Published On 2021-02-05 16:01 IST   |   Update On 2021-02-05 16:01:00 IST
நாடு முழுவதும் நாளை சாலை மறியல் போராட்டத்தை அறிவித்துள்ள விவசாயிகள் டெல்லி நகருக்குள் நுழைந்து விடாமல் தடுப்பதற்காக 3 எல்லைகளிலும் தடுப்பு வேலிகளை போலீசார் அமைத்துள்ளனர்.
புதுடெல்லி:

டெல்லியில் தொடர் முற்றுகை போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் கடந்த 26-ந்தேதி குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணி நடத்தினார்கள்.

அப்போது அவர்கள் போலீஸ் தடையை மீறி டெல்லி நகருக்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டனர். செங்கோட்டைக்குள் நுழைந்து தேசிய கொடி கம்பத்தில் சீக்கிய மதக்கொடியை ஏற்றினார்கள். அப்போது அவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில் 400-க்கும் மேற்பட்ட போலீசார் காயம் அடைந்தனர்.

இந்த சம்பவத்திற்கு பிறகு விவசாயிகள் மீது போலீசார் கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். அதையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து விவசாயிகள் முற்றுகை போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

அவர்கள் அடுத்த கட்டமாக நாளை நாடு முழுவதும் சாலை மறியல் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.

டெல்லியில் சிங்கு, திக்ரி, காஜிப்பூர் ஆகிய இடங்களில் தற்போது விவசாயிகள் முகாம்கள் அமைத்து தங்கி இருக்கிறார்கள்.

பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் அங்கு உள்ளனர். அவர்கள் நாளை டெல்லி நகருக்குள் நுழைந்து மறியலில் ஈடுபடக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே நகருக்குள் நுழைந்து விடாமல் தடுப்பதற்காக 3 எல்லைகளிலும் தடுப்பு வேலிகளை அமைத்துள்ளனர்.

5 அடுக்கு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. முள்கம்பி, கான்கிரீட் சுவர்கள், சாலைகளில் பள்ளங்கள் என பல வகைகளிலும் இந்த தடுப்பு அரண்கள் அமைக்கப்பட்டு இருக்கின்றன.

சிங்கு எல்லையில்தான் அதிக அளவில் விவசாயிகள் குவிந்திருக்கிறார்கள். எனவே அந்த இடத்தில் 6 அடி உயரத்திற்கு சுவர்களை அமைத்துள்ளனர்.

ஒரு நபர் கூட அங்கிருந்து இங்கு வராதபடி இந்த பாதுகாப்பு அரண் அமைக்கப்பட்டுள்ளது. டிராக்டர்களோ மற்ற வாகனங்களோ அந்த இடத்தை தாண்டி வர முடியாது.

3 முகாம் பகுதியிலும் ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். டெல்லி நகருக்குள் நுழையும் பல குறுகிய சாலைகளிலும் தடுப்புகளை ஏற்படுத்தி உள்ளனர்.

இவ்வாறு டெல்லியில் சுமார் 70 இடங்களில் சாலைகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இது பற்றி முன்னாள் மத்திய மந்திரியும் அகாலிதளம் தலைவர்களில் ஒருவரான ஹர்சிம்ரத் கவுர் பாதல் கூறும்போது, ‘‘விவசாயிகள் முகாமிட்டு இருக்கும் இடத்தில் அமைக்கப்பட்டுள்ள வேலியை இந்தியாவில் இதுவரை வாழ்நாளில் பார்த்தது இல்லை.

பாகிஸ்தான் எல்லையில் அமைக்கப்பட்டுள்ள வேலியை போன்று இது அமைந்துள்ளது’’ என்று அவர் கூறியுள்ளார்.

Similar News