இந்தியா
2024 பாராளுமன்ற தேர்தலில் பாஜகவிற்கு காங்கிரஸ் சிறந்த சவாலாக இருக்கும் - பிரசாந்த் கிஷோர் கணிப்பு
தென்னிந்தியாவை உள்ளடக்கிய சுமார் 200 பாராளுமன்ற தொகுதிகளில் பாஜக இன்னும் 50 இடங்களுக்கு மேல் பெற முடியாமல் திணறி வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
புதுடெல்லி:
ஐந்து மாநில தேர்தலில் காங்கிரஸ் தோல்வியடைந்த நிலையில், கட்சியை மறு சீரமைப்பு செய்யும் நடவடிக்கையில் அக்கட்சியின் இடைக்கால தலைவர் சோனியாகாந்தி ஈடுபட்டுள்ளார்.
இதன் ஒரு கட்டமாக தேர்தல் நடைபெற்ற 5 மாநிலங்களை சேர்ந்த காங்கிரஸ் தலைவர்களை ராஜினாமா செய்யுமாறு அவர் அறிவுறுத்தி உள்ளார்.
இந்நிலையில், ஐக்கிய ஜனதாதளம், பாஜக, திரினாமுல் காங்கிரஸ், திமுக உள்பட பல்வேறு கட்சிகளின் தேர்தல் வெற்றிகளுக்கு பிரச்சார வியூகம் வகுத்து கொடுத்த பிரசாந்த் கிஷோர் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளதாவது:
காங்கிரஸ் மறு அவதாரம் எடுக்க வேண்டும். அதன் அடிப்படையை சரி செய்ய வேண்டிய நேரம் இது. அதன் ஆன்மா, கருத்துக்கள் மற்றும் சித்தாந்தங்கள் அனைத்தும் புதியதாக இருக்க வேண்டும். சோனியாகாந்தி குடும்பத்தினர் காங்கிரஸ் தலைமை பொறுப்பில் இருந்து வெளியேறினாலும் அந்த கட்சி மீண்டும் உயிர் பெற முடியாது.
காங்கிரஸ் இன்று தனது செயல் திட்டங்களை ஒருங்கிணைத்து செயல் படுத்தினாலே 2024 தேர்தலில் பாஜகவிற்கு சவால் விட முடியும். கிழக்கு மற்றும் தென்னிந்தியாவை உள்ளடக்கிய சுமார் 200 பாராளுமன்ற தொகுதிகளில் பாஜக இன்னும் 50 இடங்களுக்கு மேல் பெற முடியாமல் திணறி வருகிறது.
இதனால் 2024 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸுக்கு வாய்ப்பு இருக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்
எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் சக்தி இன்று யாரிடம் இருக்கிறது என்ற கேள்விக்கு பெயரை வெளியிட மறுத்த பிரசாந்த் கிஷோர். காங்கிரஸ் உண்மையில் தனது மனதை ஒருங்கிணைத்தால், அந்த சக்தியாக உருவெடுக்கலாம் என கூறியுள்ளார்.
இதையும் படியுங்கள்... காங்கிரஸ் தலைமையை விமர்சித்த கபில் சிபல்: கண்டனம் தெரிவித்த தலைவர்கள்