வேறு நாடாக இருந்தால் அவர் கைது செய்யப்பட்டிருப்பார்: ராகுல் காந்தி காட்டம்
- அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டபோதுதான் நாடு உண்மையான சுதந்திரத்தை அடைந்தது என்றார்.
- சுதந்திரப் போராட்டத்தைப் பற்றி அவர் என்ன நினைக்கிறார் என ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார்.
புதுடெல்லி:
ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசுகையில், 1947-ல் இந்தியா உண்மையான சுதந்திரத்தை அடையவில்லை. அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டபோதுதான் நாடு உண்மையான சுதந்திரத்தை அடைந்தது என தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் புதிய தலைமை அலுவலகம் நேற்று திறக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பாராளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பேசியதாவது:
இந்தக் கட்டிடம் சாதாரணமானது அல்ல. இது லட்சக்கணக்கான மக்களின் கடின உழைப்பு மற்றும் தியாகத்தின் விளைவு.
1947-ம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடையவே இல்லை என ஆர்.எஸ்.எஸ். தலைவர் கூறி இருக்கிறார். இது நமக்கு ஏதோ ஒன்றை உணர்த்துகிறது என்று நினைக்கிறேன்.
ராமர் கோவில் கட்டப்பட்டபோதுதான் இந்தியாவில் உண்மையான சுதந்திரம் கிடைத்தது என்கிறார். அரசியலமைப்புச் சட்டம் நமது சுதந்திரத்தின் சின்னம் அல்ல என்கிறார்.
சுதந்திரப் போராட்டத்தைப் பற்றி அவர் என்ன நினைக்கிறார், அரசியலமைப்புச் சட்டம் பற்றி அவர் என்ன நினைக்கிறார் என்பதை இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒருமுறை நாட்டுக்கு தெரிவிக்கும் துணிச்சல் மோகன் பாகவத்துக்கு இருக்கிறது.
அவர் கூறியது தேசத்துரோகம். ஏனென்றால், அரசியலமைப்புச் சட்டம் செல்லாது, ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போராடியது எல்லாம் செல்லாது, இதைப் பகிரங்கமாகச் சொல்லும் துணிச்சல் அவருக்கு உண்டு. வேறு எந்த நாடாக இருந்திருந்தாலும் அவர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருப்பார் என காட்டமாக தெரிவித்தார்.