இரவு நேரத்தில் பெய்த மழை.. டெல்லியில் காற்றின் தரத்தில் முன்னேற்றம்
- டெல்லியில் நேற்று காலை மிக அடர்த்தியான பனி மூட்டத்தை காண முடிந்தது.
- ஒன்பதாம் வகுப்பு மற்றும் பதினொன்றாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஹைப்ரிட் முறையில் வகுப்புகளை நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
வடமாநிலங்களில் நிலவும் கடும் பனி மூட்டத்தால் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வந்தனர். டெல்லியில் நேற்று காலை மிக அடர்த்தியான பனி மூட்டத்தை காண முடிந்தது. காலை 11 மணி வரை இந்த நிலை நீடித்தது. அதன்பிறகும் முழுமையாக குறையவில்லை. இதனால் காற்றின் தரம் மோசமாக பதிவாகி இருந்தது.
பகல் 12 மணிக்கு பிறகே மெல்ல மெல்ல குறைந்தது. தெரிவுநிலை மிகக் குறைவாக இருந்ததால் நேற்று காலை டெல்லி விமான நிலையத்தில் தரை இறங்க வேண்டிய விமானங்களும், புறப்பட வேண்டிய விமானங்களும் தாமதமாகின. சுமார் 300 விமானங்கள் இத்தகைய கால தாமதத்தை சந்தித்தன. 6 விமானங்கள் தரையிறங்க வழியின்றி அருகில் உள்ள ஜெய்ப்பூர் விமான நிலையத்துக்கு திருப்பிவிடப்பட்டன.
இந்த நிலையில், டெல்லி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு பெய்த மழையால் காற்றின் தரம் சற்று ஆறுதல் அளிக்கும் வகையில் உள்ளது. மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அறிக்கையின்படி, இன்று காற்றின் தரம் AQI 356 ஆக பதிவாகியுள்ளது. கடந்த 14-ந்தேதி AQI 275 ஆக பதிவாகி இருந்தது.
இதனிடையே, டெல்லி அரசு கல்வி இயக்குநரகம், ஒன்பதாம் வகுப்பு மற்றும் பதினொன்றாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஹைப்ரிட் முறையில் (சில நாட்கள் ஆன்லைன் முறையிலும், சில நாட்கள் நேரடியாகவும்) வகுப்புகளை நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.