இந்தியா
பிரதமர் மோடி

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் 4000 ரூபாய்- பிரதமர் மோடி வழங்கினார்

Published On 2022-05-30 06:51 GMT   |   Update On 2022-05-30 09:24 GMT
நாடு முழுவதும் 200 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. கொரோனா ஏற்படுத்திய பாதிப்பில் இருந்து மீண்டு வரும் இந்தியா, உலகின் அதிவேகமாக வளர்ச்சிபெறும் நாடுகளில் ஒன்றாக இருக்கிறது என கூறினார்.
புதுடெல்லி:

கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் 11ந் தேதி  முதல் நடப்பாண்டு பிப்ரவரி 28ந் தேதி வரை கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு பெற்றோர்கள் இருவரையோ, பெற்றோரில் ஒருவரையோ அல்லது பாதுகாவலரையோ அல்லது தத்தெடுத்த பெற்றோர்களையோ இழந்த குழந்தைகளுக்கு அரசு ஆதரவளிப்பதற்காக குழந்தைகளுக்கான பி.எம். கேர்ஸ் திட்டம், கடந்த ஆண்டு மே 29ந் தேதி பிரதமரால் தொடங்கி வைக்கப் பட்டது. 

கொரோனாவால் அனாதையான குழந்தைகளின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய அவர்களுக்கு உறைவிட வசதி அளித்தல், கல்வி உதவித் தொகை வழங்குதல், 18 முதல் 23 வயது வரை ரூ. 10 லட்சம் நிதி உதவி அளித்தல் மற்றும் மருத்துவ காப்பீடு மூலம் அவர்களது ஆரோக்கியத்தை உறுதி செய்தல் முதலியவை இந்தத் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படுகின்றன.

இந்நிலையில், பி.எம். கேர்ஸ் திட்டத்தின் கீழ் கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூ.4000 அடிப்படை உதவித்தொகையை பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலம் வழங்கி தொடங்கிவைத்தார். மேலும் பெற்றோரை இழந்த  குழந்தைகள் உயர்கல்வி பயில்வதற்காக கல்வி கடன் வாங்க விரும்பினால், அவர்களுக்கு ‘பிம்.எம். கேர்ஸ்’ உதவி செய்யும் என  தெரிவித்துள்ளார்.

மேலும் கொரோனா சூழலை இந்தியா கையாண்டவிதம் குறித்து பேசிய அவர், ‘கொரோனாவின்போது இந்தியா பிரச்சனையாக  இருக்கவில்லை. தீர்வை கொடுக்கும் நாடாக இருந்தது. நாம் உலக நாடுகளுக்கு மருத்துவ உதவி வழங்கி வந்தோம். தடுப்பூசிகளை உலகில் உள்ள பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தோம். நாடு முழுவதும் 200 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. கொரோனா ஏற்படுத்திய பாதிப்பில் இருந்து மீண்டு வரும் இந்தியா, உலகின் அதிவேகமாக வளர்ச்சிபெறும் நாடுகளில் ஒன்றாக இருக்கிறது' என கூறினார்.
Tags:    

Similar News