ஓராண்டில் 3000 இளம்பெண்கள் பாலியல் வன்கொடுமையால் பாதிப்பு- பருவ வயது காதலும் காரணமா?
- பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவிகள் பருவ வயது காதலில் விழுகின்றனர்.
- இது போன்ற வழக்குகளில் குற்றம் நடந்த சில மணி நேரங்களில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலத்தில் கடந்த ஆண்டு சிறுமிகள் பெண்கள் உட்பட 2945 பேர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவங்கள் தெரிந்தவர்கள் மூலமே அதிக அளவில் நடந்துள்ளது.
குறிப்பாக 1912 பேர் நன்றாக தெரிந்தவர்கள் மூலம் செய்யப்பட்டுள்ளனர். இந்த பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் 15 முதல் 18 வயது வரை உள்ள சிறுமிகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 3 ஆண்டுகளில் ஒப்பிடும் பொழுது 2024-ம் ஆண்டில் அதிக அளவில் தெலுங்கானாவில் பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவர்களில் 1,251 பேர் சிறுமிகள் அதாவது மொத்த வழக்குகளில் 82 சதவீதம் சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
இந்த வழக்குகளுக்கு போலீசார் அதிகம் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். இதனால் 90 சதவீத வழக்குகள் தீர்க்கப்பட்டுள்ளன. இது போன்ற பாலியல் வன்கொடுமை சம்பவங்களுக்கு பருவ வயது காதல் ஒரு காரண மாக அமைந்துள்ளது. படிக்கின்ற காலத்தில் காதல் வயப்படும் சிறுமிகள் ஆசை வார்த்தைகளால் ஏமாந்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளனர்.
இது குறித்து பெண் பாதுகாப்பு பிரிவு டி.ஜி.பி. ஷிகா கோயல் கூறுகையில்:-
பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவிகள் பருவ வயது காதலில் விழுகின்றனர். இது பாலியல் வன்கொடுமை சம்பவங்களுக்கு அடிப்படையாக அமைந்துள்ளது.
இது போன்ற வழக்குகளில் குற்றம் நடந்த சில மணி நேரங்களில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்பவர்கள் மீது அதிக அளவு போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. போக்சோ வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு சார்பாக ரூ.5.42 கோடி வழங்கப்பட்டுள்ளன. இது தவிர கடத்தல் வழக்குகளுக்கு உடனுக்குடன் தீர்வு வழங்கப்பட்டுள்ளது என்றார்.