திருவனந்தபுரத்தில் தேனிலவு சென்று திரும்பிய தம்பதியர் உள்பட 4 பேர் கார் விபத்தில் பலி
- எதிர்பாராதவிதமாக அந்த பஸ் மீது கார் பயங்கரமாக மோதியது.
- காரின் முன்பகுதி சேதம் அடைந்ததால் உள்ளே இருப்பவர்களை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கொன்னி மல்லசேரியை சேர்ந்தவர் நிகில் (வயது 27), கனடாவில் வேலை பார்த்து வருகிார். இவருக்கும் அனு (26) என்பவருக்கும் கடந்த 30-ந் தேதி திருமணம் நடைபெற்றது.
திருமணத்திற்கு பிறகு புதுமணத் தம்பதிகள் தேனிலவுக்காக மலேசியா சென்றனர். அங்கு தேனிலவை முடித்து விட்டு கேரளா புறப்பட்டனர். அவர்களது விமானம் இன்று காலை திருவனந்தபுரம் விமான நிலையம் வந்தது.
தம்பதியரை வரவேற்று அழைத்துச் செல்வதற்காக அனுவன் தந்தை பிஜு, நிகிலின் தந்தை மத்தாய் ஈப்பன் ஆகியோர் வந்திருந்தனர். விமானத்தில் இருந்து நிகில்-அனு தம்பதி வந்ததும் அங்கிருந்து 4 பேரும் காரில் வீட்டுக்கு புறப்பட்டனர்.
அதிகாலை 4 மணிக்கு கார், புனலூர்-மூவாட்டு ப்புழா மாநில நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த சாலையில் தமிழக ஐயப்ப பக்தர்கள் பஸ் வந்தது. எதிர்பாராதவிதமாக அந்த பஸ் மீது கார் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் கார் பலத்த சேதம் அடைந்தது.
விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் போலீசாரும், தீயணைப்பு படையினரும் விரைந்து வந்து மீட்பு பணியில் இறங்கினர். காரின் முன்பகுதி பலத்த சேதம் அடைந்ததால் உள்ளே இருப்பவர்களை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது.
ஹைட்ராலிக் கட்டர் கொண்டு வரப்பட்டு காரின் பாகங்களை உடைத்த பிறகே, அதன் உள்ளே இருந்தவர்களை மீட்க முடிந்தது. அதற்குள் அனுவை தவிர மற்ற 3 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகி விட்டனர்.
படுகாயம் அடைந்த அனுவை மீட்டு பத்தனம் திட்டாவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவரும் இறந்தார்.
இந்த விபத்தில் பஸ் டிரைவர் மற்றும் பயணிகள் சிலர் லேசான காயம் அடைந்தனர்.