இந்தியா

பரபரப்பை கிளப்பிய பெங்களூரு ஐ.டி.ஊழியர் தற்கொலை.. தலைமறைவான மனைவி - மாமியார் அதிரடி கைது

Published On 2024-12-15 04:07 GMT   |   Update On 2024-12-15 04:07 GMT
  • 24 பக்க தற்கொலைக் குறிப்பை விட்டுவிட்டு, 90 நிமிட வீடியோவைப் பதிவு செய்துவைத்து அவர் தற்கொலை செய்துள்ளார்.
  • வழக்குகளை வாபஸ் பெற ரூ. 3 கோடியும், அவரது மகனைப் பார்க்க வருவதற்கு ரூ. 30 லட்சமும் நிகிதா குடும்பத்தினர் கேட்டனர்

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதான அதுல் சுபாஷ் என்ற ஐடி ஊழியர் கடந்த திங்களன்று தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். மரணத்துக்கு முன் செய்யவேண்டியவை என்று அட்டவணை போட்டு அதை ஒவ்வொன்றாக முடித்துவிட்டு கடைசியில் அவர் தற்கொலை செய்துள்ளார்.

24 பக்க தற்கொலைக் குறிப்பை விட்டுவிட்டு, 90 நிமிட வீடியோவைப் பதிவு செய்துவைத்து அவர் தற்கொலை செய்துள்ளார். அந்த பதிவில், தன் மீதும் தனது குடும்பத்தினர் மீது தனது மனைவி நிகிதா சிங்கானியா மற்றும் அவரது குடும்பத்தினர் பல்வேறு பொய் வழக்குகளைப் போட்டுள்ளதாகக் குற்றம் சாட்டினார்.

விவாகரத்து பெற்ற மனைவி மற்றும் மகனுக்குப் பராமரிப்பு தொகையாக மாதம் ரூ.2 லட்சம் வழங்கவேண்டும் என்று தன்னை அவர்கள் வற்புறுத்துவதாகத் தெரிவித்தார்.

மேலும் உத்தர பிரதேச ஜான்பூர் நீதிமன்ற நீதிபதி, என் மீதான வழக்குகளைத் தீர்த்து வைக்க ரூ.5 லட்சம் லஞ்சம் கேட்பதாகவும் குற்றம் சாட்டியிருக்கிறார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து பெங்களூரு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அதுல் மீதான வழக்குகளை வாபஸ் பெற ரூ. 3 கோடியும், அவரது மகனைப் பார்க்க வருவதற்கு ரூ. 30 லட்சமும் நிகிதா குடும்பத்தினர் கேட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

 

இதற்கிடையே சுபாஷின் தற்கொலையை தொடர்ந்து உத்தரப்பிரதேசத்தில் உள்ள மனைவி, மாமியார் மற்றும் உறவினர்கள் தலைமறைவாகினர். அவர்கள் மூன்று நாட்களுக்குள் போலீஸ் முன் ஆஜராக வேண்டும் என்று உத்தர பிரதேசத்தில் உள்ள அவர்களது வீட்டில் பெங்களூரு போலீஸ் நேற்று முன் தினம் நோட்டீஸ் ஒட்டியது.

இந்நிலையில் தலைமறைவாக இருந்த அதுல் சுபாஷின் மனைவி நிகிதா சிங்கானியா, அவரது தாயார் நிஷா மற்றும் சகோதரர் அனுராக் ஆகியோர் தற்கொலைக்குத் தூண்டிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹரியானாவின் குருகிராமில் இருந்த நிகிதாவையும், உத்தரப் பிரதேசத்தின் அலகாபாத்தில் இருந்த அவரது தாய் நிஷா மற்றும் சகோதரர் அனுராக் ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைக்கு அவர்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.   

முன்னதாக சட்டங்கள் அனைத்தும் பெண்களுக்கு சாதகமாகவே இருப்பதாக தனது பதிவில் குற்றம் சாட்டிய அதுல் சுபாஷ்,

நான் எவ்வளவு கடினமாக உழைத்து, என் வேலையில் சிறந்து விளங்குகிறேனோ, அவ்வளவு அதிகமாக நானும் என் குடும்பத்தினரும் துன்புறுத்தப்படுகிறோம், மிரட்டி பணம் பறிக்கப்படுகிறோம், மேலும் இதை ஒட்டுமொத்த சட்ட அமைப்பும் ஊக்குவிக்கிறது.

இப்போது, நான் போனதால், பணமும் இருக்காது, என் வயதான பெற்றோரையும், என் சகோதரனையும் துன்புறுத்த எந்த காரணமும் இருக்காது என்று உருக்கமாகத் தெரிவித்தார்.

மேலும் மனைவி நிகிதாவும் அவரது தாயார் நிஷாவும் தன்னை தற்கொலைக்கு தூண்டியதாகவும் அவர் குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

Similar News