ஓட்டலில் பாய்லர் வெடித்து புலம்பெயர் தொழிலாளி பலி- 4 பேர் கவலைக்கிடம்
- ஓட்டலில் பயங்கர சத்தத்துடன் பாய்லர் வெடித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் எர்ணாகுளம் கலூர் பகுதியில் ஜவகர்லால் நேரு சர்வதேச மைதானம் இருக்கிறது. இந்த மைதானத்தை சுற்றிலும் ஏராளமான கடைகள் செயல்பட்டு வருகின்றன. அங்கு அஸ்வின் தீபக் என்பவர் 'இ-டெலி காபே' என்ற பெயரில் ஓட்டல் நடத்தி வருகிறார்.
அவரது ஓட்டல் அந்த பகுதியில் பிரபலமான ஓட்டல் ஆகும். இதனால் எப்போதும் அங்கு வாடிக்கையாளர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். இந்த நிலையில் நேற்று மாலை ஓட்டலில் இருந்த பாய்லர் திடீரென வெடித்து சிதறியது. இதில் அந்த ஓட்டலில் இருந்த பொருட்கள் தீப்பிடித்து எரிந்தன.
மேலும் ஜன்னல்கள் மற்றும் கண்ணாடிகள் உடைந்தன. இதையடுத்து ஓட்டலில் இருந்த வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்கள் அலிறயடித்துக் கொண்டு அங்கிருந்து ஓடினர். இருந்த போதிலும் இந்த சம்பவத்தில் அந்த ஓட்டலில் வேலை பார்த்து வந்த மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த புலம்பெயர் தொழிலாளியான சுமித் என்பவர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.
மேலும் நாகாலாந்தை சேர்ந்த கைபோ நுபி, லுலு, அசாமை சேர்ந்த யஹியன் அலி, ஒடிசாவை சேர்ந்த கிரண் ஆகிய 4 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் 4 பேரும் எர்ணாகுளம் அரசு மற்றும் தனியார் மருத்துவ மனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
கவலைக்கிடமான நிலையில் இருக்கும் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஓட்டலில் பயங்கர சத்தத்துடன் பாய்லர் வெடித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. முதலில் ஏதோ குண்டு வெடிப்பு நடந்து விட்டதோ? என்று பொதுமக்கள் மத்தியில் அச்சம் உருவானது.
அதன்பிறகே பாய்லர் வெடித்து தீப்பிடித்தது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.