பரபரப்பான சாலையில் பணக்கட்டுகளை வீசி வீடியோ எடுத்த யூடியூபர் கைது
- பலவிதமான சாகசங்களை செய்து யூடியூப் சேனலில் பதிவிட்டு பிரபலமாகி வருகிறார்.
- விபத்து ஏற்படும் சூழ்நிலை நிலவியது.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம், காட்கேசர், பாலா நகரை சேர்ந்தவர் பானு சந்தர் ரெட்டி. இவர் யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். பல்வேறு விதமான சாகசங்களை செய்து தனது யூடியூப் சேனலில் பதிவிட்டு பிரபலமாகி வருகிறார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் பானு சந்தர் ரெட்டி பரபரப்பாக காணப்படும் ஓ.ஆர்.ஆர் ரிங் ரோட்டுக்கு வந்தார்.
தான் கட்டு கட்டாக கொண்டு வந்த ரூபாய் நோட்டுகளை மேலே வீசினார். ரூபாய் நோட்டுகள் காற்றில் பறந்து வந்து சாலையில் சிதறியது. இதனைக் கண்ட வாகன ஓட்டிகள் மற்றும் அப்பகுதியில் நடந்து சென்ற பொது மக்கள் காற்றில் பறந்து வந்த ரூபாய் நோட்டுகளை போட்டி போட்டு எடுத்தனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
மேலும் பொதுமக்கள் வாகனங்களுக்கு இடை இடையே புகுந்ததால் விபத்து ஏற்படும் சூழ்நிலை நிலவியது. பொதுமக்கள் ரூபாய் நோட்டுகளை எடுப்பதை பானு சந்திர ரெட்டி தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்தார்.
பதிவு செய்த வீடியோவை தனது யூடியூப் சேனல் மற்றும் சமூக வலைதளங்களில் பதிவு செய்தார். இந்த வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனைக் கண்ட போலீசார் பானு சந்தர் ரெட்டி மீது வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர்.