அல்லு அர்ஜூன் பக்கம் சாய்வதற்கு அவர் எதை இழந்தார்?: சட்டசபையில் டோலிவுட்டை விளாசிய ரேவந்த் ரெட்டி
- கோமா நிலையை அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுவனை பார்க்க அவர்களுக்கு மனம் வரவில்லை.
- அல்லு அர்ஜூன் காலை இழந்தாரா அல்லது கண் பார்வையை இழந்தாரா?.
புஷ்பா 2 சிறப்பு காட்சியைப் பார்க்க கடந்த 4-ந்தேதி சந்தியா தியேட்டருக்கு நடிகர் அல்லு அர்ஜூன் சென்றபோது, கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் பெண் ஒருவர் உயிரிழந்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவரது மகனுக்கும் மூளைச்சாவு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கில் நடிகர் அல்லு அர்ஜூன் கைது செய்யப்பட்டு, இடைக்கால ஜாமினில் வெளியே விடப்பட்டுள்ளார்.
கூட்ட நெரசில் ஏற்பட்ட நிலையிலும் படம் ஹிட்டானது என அல்லு அர்ஜூன் பேசியது மற்றும் துயர சம்பவம் நடைபெற்ற நிலையில் ரோடு ஷோவில் கலந்து கொண்டதாக கூறப்படுவதில் எது உண்மை என ஏ.ஐ.எம்.ஐ.எம். அக்பருதீன் ஓவைசி எம்.எல்.ஏ. சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பியிருந்தார்.
இது தொடர்பாக சட்டசபையில் முதல்வர் ரேவந்த் ரெட்டி விளக்கம் அளித்து பேசியதாவது:-
புஷ்பா 2 படத்தை பார்ப்பதற்காக நடிகர் அல்லு அர்ஜூன் மற்றும் சில பிரபலங்கள் தியேட்டருக்கு வருவதாகக் கூறி, போலீஸ் பாதுகாப்பு கேட்டு டிசம்பர் 4-ந்தேதி மனு கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாது என்று கூறி போலீசார் அந்த மனுவை நிராகரித்துள்ளனர்.
அனுமதி மறுத்த பிறகும் நடிகர் அல்லு அர்ஜூன் தியேட்டருக்கு வந்துள்ளார். ஏ.சி.பி. அவரை உடனடியாக தியேட்டரில் இருந்து வெளியேற கூறிய நிலையில், அல்லு அர்ஜூன் மறுத்துள்ளார். கூட்ட நெரிசல் ஏற்பட்டு இருவர் உயிரிழந்துள்ளனர். வெளியேறவில்லை என்றால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என டிசிபி எச்சரித்துள்ளார்.
பின்னர் போலீசார் வலுக்கட்டாயமாக அவரை வெளியேற்றியுள்ளனர். அதன்பிறகு திரும்பி செல்லும்போது காரின் ரூஃப்டாப்பை திறந்து ரசிகர்களை நோக்கி கையசைத்துள்ளார். அவர் எப்படிப்பட்டவர் என்பது எனக்குப் புரியவில்லை, சொல்லவும் முடியவில்லை. மேலும், முதல்வர் நாற்காலியில் அமைதியாக உட்காரவும் எனக்கு முடியவில்லை.
கைதாகி வெளியே வந்த பிறகு அல்லு அர்ஜூனை அவரது வீட்டுக்கே சென்று பிரபலங்கள் சந்தித்து ஆறுதல் கூறுகின்றனர். ஆனால் கூட்ட நெரிசலில் சிக்கி தாயை இழந்த பிறகு, கோமா நிலையை அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுவனை பார்க்க அவர்களுக்கு மனம் வரவில்லை. திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் மனிதாபிமானமற்றவர்களாக இருக்கக் கூடாது.
பாதிப்படைந்த சிறுவனின் குடும்பம் அவனின் ஆசைகளை நிறைவேற்ற பல தியாகங்களை செய்துள்ளது. அவர்கள் மீது அனுதாபம் காட்டாமல் அல்லது அவர்களுடன் நிற்காமல் சினிமா பிரபலங்கள் நடிகரை சுற்றி நிற்க முடிவு செய்தனர். அல்லு அர்ஜூன் காலை இழந்தாரா அல்லது கண் பார்வையை இழந்தாரா?. அவருடைய கிட்னி பாதிக்கப்பட்டதா? இது தெலுங்கு திரைப்படத் துறையின் முன்னுரிமைகளைப் பிரதிபலிக்கிறதா?.
மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்துவர்களை அரசு பார்த்துக் கொண்டு சும்மா இருக்காது. இதுபோன்ற கூட்ட நெரிசல் ஏற்பட காரணமாக இருந்தவர்களுக்கு சலுகைகளை வழங்க முடியாது. நான் முதல்வராக இருக்கும் வரை இனி தெலுங்கானாவில் திரைப்படங்களுக்கு சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி கிடையாது.
இவ்வாறு ரேவந்த் ரெட்டி விளக்கம் அளித்தார்.