விமான நிலையத்தில் ரூ.50 கோடி உயர் ரக கஞ்சா பறிமுதல்- 5 பேர் கைது
- 4 நாட்களில் சுங்கத்துறையினரால் சிறப்பு சோதனை மேற்கொள்ளப்பட்டது.
- கஞ்சாவை கடத்தி வந்த 5 பயணிகளை கைது செய்தனர்.
மும்பை:
வெளிநாடுகளில் இருந்து மும்பைக்கு அதிகளவில் தங்கம், போதைப்பொருள் விமானம் மூலம் கடத்தி வரப்படுகிறது. இதை தடுக்க சுங்கத்துறையினர் விமான நிலையங்களில் பயணிகளிடம் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் மும்பை விமான நிலையத்தில் கடந்த மாதம் 28-ந்தேதி முதல் 31-ந்தேதி வரையிலான 4 நாட்களில் சுங்கத்துறையினரால் சிறப்பு சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த சோதனையின் போது அதிகாரிகள் வெளிநாடுகளில் இருந்து வந்த விமான பயணிகள், அவர்களின் உடைமைகளில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனையின் போது இருவேறு சம்பவங்களில் தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து வந்த விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.50 கோடி மதிப்பிலான உயர் ரக கஞ்சாவை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் கஞ்சாவை கடத்தி வந்த 5 பயணிகளை கைது செய்தனர்.
இதேபோல ரியாத், மஸ்கட், துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.93.8 லட்சம் வைரம், ரூ.1½ கோடி தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக அதிகாரிகள் 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.