ஒரே நாடு, ஒரே தேர்தல்: மாதிரி நடத்தை விதிமுறைகள் முக்கியமானது என்கிறது தேர்தல் ஆணையம்
- தேர்தல் மாதிரி நடத்தை விதிமுறைகள் அமலாக்கத்தை இடையூறாக பார்ப்பது சரியல்ல.
- தேர்தல் பிரசாரத்தின்போது அனைத்து தரப்பினருக்கும் சமமாக போட்டியிடும் வாய்ப்பை உருவாக்குவதற்கான முக்கிய கருவி.
நாடு முழுவதும் பாராளுமன்றம், சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' மசோதாவை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது. நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் ஆய்வுக்கு மசோதா அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தை கொண்டு வருவதற்கு மத்திய அரசு பல்வேறு காரணங்களை சொல்லி வருகிறது. அவை வருமாறு:-
அடிக்கடி தேர்தல் நடத்துவதால் செலவு அதிகரிக்கிறது. நேரம் வீணாகிறது. அடிக்கடி நடக்கும் தேர்தல்களுக்கு தேர்தல் மாதிரி நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்படுவதால் வளர்ச்சி திட்டங்கள் முடங்குகின்றன. சேவைகளின் செயல்பாடு பாதிக்கப்படுகிறது. அதிகாரிகள் நீண்ட காலத்துக்கு தேர்தல் பணிகளுக்கு அனுப்பப்படுகிறார்கள். மொத்தத்தில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுகிறது.
இவ்வாறு மத்திய அரசு கூறி வருகிறது.
ஆனால், தேர்தல் மாதிரி நடத்தை விதிமுறைகள் தொடர்பான மத்திய அரசின் கருத்துடன் தேர்தல் கமிஷன் முரண்படுகிறது. நடத்தை விதிமுறைகள் தொடர்பான சட்ட ஆணையத்தின் கேள்விக்கு தேர்தல் கமிஷன் அளித்த பதில் வருமாறு:-
தேர்தல் மாதிரி நடத்தை விதிமுறைகள் அமலாக்கத்தை இடையூறாக பார்ப்பது சரியல்ல. அது, தேர்தல் பிரசாரத்தின்போது அனைத்து தரப்பினருக்கும் சமமாக போட்டியிடும் வாய்ப்பை உருவாக்குவதற்கான முக்கிய கருவி ஆகும்.
அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தி அந்த விதிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. சுதந்திரமான, நேர்மையான தேர்தல் நடத்த அவை அவசியம். தேர்தல் தேதி அறிவிப்பு முதல், தேர்தல் பணிகள் முடிவடையும் வரை குறைவான காலத்துக்குத்தான் நடத்தை விதிமுறை அமல்படுத்தப்படுகிறது.
இவ்வாறு தேர்தல் கமிஷன் கூறியுள்ளது.
ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவை ஆய்வு செய்யும் நாடாளுமன்ற கூட்டுக்குழுவிடம் தேர்தல் கமிஷனின் நிலைப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது.