1978-ல் தொடங்கப்பட்ட சரத் பவாரின் துரோக அரசியல் முடிவுக்கு வந்துள்ளது: அமித் ஷா
- பா.ஜனதா வெற்றியால் நிலையான அரசு அமைந்து உள்ளதால் சரத்பவாரின் துரோக அரசியல் முடிவுக்கு வந்து உள்ளது.
- 2024 தேர்தல்களில் மக்கள் உத்தவ் தாக்கரே, சரத் பவாருக்கான இடத்தை காட்டி உள்ளனர்.
மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தலில் பா.ஜனதா கூட்டணி அமோக வெற்றி பெற்றது. குறிப்பாக பா.ஜனதா மொத்தம் உள்ள 288 தொகுதிகளில் 149-ல் போட்டியிட்டு 132 இடங்களை கைப்பற்றி சாதனை படைத்தது. இந்த சாதனை வெற்றிக்கு பிறகு முதல் முறையாக பா.ஜனதா மாநில நிர்வாகிகள் மாநாடு ஷீரடியில் நேற்று நடந்தது. இதில் மாநிலம் முழுவதும் இருந்து எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட தலைவர்கள், செயலாளர்கள் மற்றும் தொண்டர்கள் என சுமார் 15 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.
மாநாட்டில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, நிதின் கட்காரி, முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் உள்ளிட்ட பல தலைவர்களும் கலந்து கொண்டு கட்சியினரை அடுத்து வரும் தேர்தல்களுக்கு உற்சாகப்படுத்தும் வகையில் பேசினா்.
இதில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பேசியதாவது:-
சரத்பவார் துரோக மற்றும் நம்பிக்கை துரோக அரசியலை மகாராஷ்டிரா மாநிலத்தில் 1978-ம் ஆண்டு தொடங்கினார். 2024-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அந்த அரசியல் மக்களால் நிராகரிக்கப்பட்டுள்ளது. பா.ஜனதா இந்த வெற்றியால் நிலையான அரசு அமைந்து உள்ளதால் சரத்பவாரின் துரோக அரசியல் முடிவுக்கு வந்து உள்ளது.
அதேபோல உத்தவ் தாக்கரேவின் வாரிசு, துரோக அரசியலும் நிராகரிக்கப்பட்டுள்ளது. 2024 தேர்தல்களில் மக்கள் உத்தவ் தாக்கரே, சரத் பவாருக்கான இடத்தை காட்டி உள்ளனர். மராட்டியத்தில் பா.ஜனதா பெற்று உள்ள வெற்றி நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தும். வரலாற்று சிறப்புமிக்க இந்த வெற்றி 'இந்தியா' கூட்டணியின் நம்பிக்கையை உடைத்துவிட்டது. அடுத்த மாதம் டெல்லியில் நடைபெறும் சட்டசபை தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெறும்.
இவ்வாறு அமித் ஷா கூறினார்.