குற்றவாளிகளை பிடிக்க அதிநவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தும் நேரம் வந்துவிட்டது - அமித் ஷா
- பாரத்போல் வெளியீட்டு விழாவில் மத்திய அமைச்சர் கலந்து கொண்டார்.
- விசாரணை சிறந்த முறையில் நடைபெறுவதை உறுதி செய்யும்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இந்திய புலனாய்வு அமைப்புகள் நவீன தொழில்நுட்பம் மற்றும் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி தப்பியோடியவர்களைக் கண்டுபிடிக்கும் நேரம் வந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.
பாரத் மண்டபத்தில் நடைபெற்ற 'பாரத்போல்' வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, "மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) உருவாக்கிய போர்ட்டலின் மிக முக்கியமான அம்சம் மத்திய, மாநில ஏஜென்சிகள் இன்டர்போலுடன் எளிதாக தொடர்பு கொள்ளவும், அவர்களின் விசாரணைகளை விரைவுபடுத்தவும் அனுமதிக்கும்," என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "ஒரு குற்றம் செய்துவிட்டு இந்தியாவில் இருந்து தப்பியோடியவர்களை கைது செய்து நீதியின் முன் நிறுத்துவதற்கு நவீன தொழில்நுட்பம் மற்றும் நுட்பங்களைப் பயன்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது. உலகளாவிய சவால்களை நாம் கண்காணித்து நமது உள்கட்டமைப்புகளைப் புதுப்பிக்க வேண்டும். பாரத்போல் அந்தத் திசையில் ஒரு படியாகும்" என்று கூறினார்.
இண்டர்போலில் உள்ள 195 உறுப்பு நாடுகளிடம் இருந்து தங்கள் வழக்குகள் குறித்த தகவல்களை பகிர்ந்து கொள்ளவும், தகவல்களை பெறவும் மத்திய மற்றும் மாநில புலனாய்வு அமைப்புகளை புதிய போர்டல் அனுமதிக்கும் என்றார்.
கடந்த ஆண்டு மோடி அரசு கொண்டு வந்த மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள், தப்பியோடியவர்கள் மற்றும் தலைமறைவானவர்களுக்கு எதிரான விசாரணைகள் சிறந்த முறையில் நடைபெறுவதை உறுதி செய்யும்.
இதே நிகழ்வில் வைத்து, மத்திய அமைச்சர் அமித் ஷா 35 சிபிஐ அதிகாரிகளுக்கு காவல்துறை பதக்கங்களை வழங்கினார். சிபிஐ அதிகாரிகள் சிறப்பான சேவைக்கான குடியரசுத் தலைவரின் காவல்துறை பதக்கம், புலனாய்வுத் துறையில் சிறந்து விளங்கியதற்காக மத்திய உள்துறை அமைச்சரின் பதக்கம் ஆகியவற்றை பெற்றுள்ளனர்.