இந்தியா

பணக்காரர்களுக்கு ஒரு இந்தியா.. ஏழைகளுக்கு ஒரு இந்தியா உருவாக்கப்படுகிறது - ராகுல் காந்தி

Published On 2025-02-21 07:58 IST   |   Update On 2025-02-21 07:58:00 IST
  • ஒரு பக்கம், தாங்கள் விரும்பியதைப் பெறும் பணக்காரர்கள் உள்ளனர்
  • ஏழை மக்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் சிறு வணிகர்களுக்காண குரல் இன்னும் இருக்கிறதென்றால் அதற்கு அரசியலமைப்பே காரணம்.

மக்களவை எதிரிகட்சித் தலைவர் ராகுல் காந்தி இரண்டு நாள் பயணமாக நேற்று (வியாழக்கிழமை) உத்தரப் பிரதேசத்துக்கு வருகை தந்தார்.

ரேபரேலியில் பேரணியின்போது பேசிய அவர், இரண்டு இந்தியாக்கள் உருவாக்கப்படுகின்றன. ஒரு பக்கம், தாங்கள் விரும்பியதைப் பெறும் பணக்காரர்கள் உள்ளனர். அவர்களுக்காக கொரோனாவின் போது, லட்சக்கணக்கான பெருநிறுவன கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

மறுபுறம், விவசாயிகள், வேலையில்லாத இளைஞர்கள் மற்றும் கடின உழைப்பாளிகளுக்கான இந்தியா உள்ளது. நமக்கு இரண்டு இந்தியாக்கள் இருக்க முடியாது. நமக்கு ஒரே இந்தியா வேண்டும்.

நாம் எப்படி இந்த நிலையை அடைந்தோம்?. மோடி அரசாங்கம் பணமதிப்பிழப்பு போன்ற கொள்கைகளை செயல்படுத்தியதன் மூலம் சிறு வணிகங்களை முடிவுக்குக் கொண்டு வந்தது. இந்த நாட்டில் ஏழை மக்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் சிறு வணிகர்களுக்காண குரல் இன்னும் இருக்கிறதென்றால் அதற்கு அரசியலமைப்பே காரணம்.

காந்தி, அம்பேத்கர், நேரு ஆகியோர் இந்த அரசியலமைப்பை நமக்குக் கொடுத்தார்கள். அவர்கள் சிறைக்குச் சென்று ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போராடினார்கள்.

இன்று, ஆட்சியில் இருப்பவர்கள் இந்த அரசியலமைப்பைத் தாக்குகிறார்கள். யாராவது இந்தியாவைப் பிரிக்க முயற்சித்தால், அதை நீங்கள் நிறுத்த வேண்டும். இந்த நாட்டை வெறுப்பு நிறைந்ததாக மாற்றும் அவர்களின் முயற்சியை ஏற்றுக்கொள்ளாதீர்கள். இந்த நாடு அன்பின் நாடு, எப்போதும் அன்பின் ஒன்றாகவே இருக்கும் என்று தெரிவித்தார்.

தொடர்ந்து தலித் மாணவர்களுடன் உரையாடிய ராகுல் காந்தி, ஆங்கிலம் கற்க வேண்டிய அவசியம் குறித்து எடுத்துரைத்தார். ஆர்எஸ்எஸ் தலைவர் ஆங்கிலம் பேச மாட்டேன் என்று கூறுகிறார். தலித் மாணவர்கள் ஆங்கிலம் கற்று உயர் இடங்களுக்கு சென்றுவிடக்கூடாது என்பதே ஆர்எஸ்எஸ் எண்ணம். அதிகாரத்துக்கு வர ஆங்கிலம் ஒரு கருவி என்று தெரிவித்தார்.

இந்தியாவில் உள்ள உயர் கல்வி நிறுவனங்களின் எத்தனை தலித் தலைவர்கள் இருக்கிறார்கள் என கேள்வி எழுப்பிய ராகுல், இந்த அமைப்பு உங்களை ஒவ்வொரு நாளும் தாக்குகிறது, பாதிக்கும் மேற்பட்ட நேரங்களில் அது உங்களை எப்படித் தாக்குகிறது என்பது கூட உங்களுக்குத் தெரியாது.

அரசியலமைப்பின் சித்தாந்தம்தான் உங்கள் சித்தாந்தம் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இந்த நாட்டில் தலித்துகள் இல்லையென்றால், இந்த நாட்டிற்கு அரசியலமைப்புச் சட்டம் கிடைத்திருக்காது என்பதை நான் உறுதியாகச் சொல்ல முடியும் என்று தெரிவித்தார்.

Tags:    

Similar News